பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 319 'மறிகடல் விடமுண்ட வானவன்', ‘நீல கண்டத்தை உடையன்', 'பிறைகுலாம் சடைப் பிஞ்ஞகன்’ என்ற இந்த மூன்று விளிகளில், பிஞ்ஞகனுடைய மூன்று செயல்கள் பேசப்பெறுகின்றன. மறிகடல் நஞ்சை உண்ண என்ன நிகழ்ந்தது? பாற்கடல் கடையப் புறப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் விடைபெற்றார்களா? இல்லையே. அவனை ஒதுக்கிவிட்டுச் சென்ற அவர்கள் நஞ்சு வெளிவந்தவுடன் அலறிக்கொண்டு அவன் திருவடியில் வீழ்ந்தனர். அந்த நஞ்சை எடுத்து அவன் உண்டான். உண்ட நஞ்சு உள்ளே சென்று வயிற்றிலுள்ள பிரபஞ்சத்தை அழித்துவிடாமல் இருக்க அதனைத் தொண்டைக் குழிக்குள் நிறுத்திக்கொண்டான். தக்கன் வேள்வியில் அவிசுக்கு ஆசைப்பட்டுச் சென்ற சந்திரன், வீரபத்திரர் கொடுத்த உதையைப் பொறுக்க மாட்டாமல் சரணம் என்று வந்து திருவடியில் வீழ்ந்ததும் அவனைச் சடையில் தூக்கி வைத்துக்கொண்டான். தேவர்களும் சந்திரனும் இவன் முழுமுதற் பொருள் என்பதை அறியாமல் அலட்சியம் செய்து, தத்தம் செயல்களைத் தொடங்கவும் பெரும் அவதிக்குள்ளாயினர். உடனே அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அனைவரையும் மன்னித்து அவர்களை வாழுமாறு செய்தவன் தமக்கும் பெருநெறி காட்டவேண்டும் என்கிறார். இந்தத் தேவர்கள், அவனை நினைக்கவும் இல்லை; சந்திரன் ஆகியோர் நமச்சிவாய என்று ஒதவும் இல்லை; முதலில் அவனடி பணியவும் இல்லை. எல்லாவற்றையும்விட அவனை அலட்சியம் செய்தனர். அப்படியிருந்தும் அவர்கள் உய்ய வழி வகுத்தான். இதனைக் கூறிவிட்டு, அவர்களும் இந்த மூன்றையும் செய்யவில்லை, தாமும் இந்த மூன்றையும் செய்யவில்லை. ஆபத்து வந்தபொழுது அவனிடம் சென்று அலறினர்