பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னுரை 333 அடுத்து, இப்பதிகத்தில் செவிகள்பற்றி ஆறு இடங் களில் பேசப்படுகிறது. கண்களைப்பற்றிய பாடல்களை இப்பிறவிக்குரிய செயல் அன்று என்று பொருள்கண்டது போல, செவிக்குரிய செயல்களையும் இவ்வுடம்பு நீங்கிய பிறகு நடைபெறுகின்ற செயல்கள் என்று நினைக்கத் தொடங்கினால், அது தவறாக முடிந்துவிடும். ஆறு இடங்களில் நீ பேச நான் கேட்கவேண்டும்’ என்று ஏன் பாடுகிறார் என்ற வினாவை எழுப்பினால் மனித மனத்தின் ஒரு விந்தையான பகுதியை அது வெளிப்படுத்தி நிற்கும். சிலருடைய குரல் எவ்வளவு கேட்டாலும் அலுப்புத் தட்டாது. இன்னும் சற்றுப் பேசமாட்டாரா என்ற ஆர்வத்தை மிகுதிப்படுத்தும். கேட்பவரைச் சுண்டியிழுக்கும் ஆற்றல் சிலருடைய சொல்லுக்கும் குரலுக்கும் உண்டு. இதனையே வள்ளுவப் பேராசான் கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்” (643) என்று கூறிச் செல்கிறார். சாதாரண மனிதர்களுடைய பேச்சுக்கே இத்தகைய பேராற்றல் உண்டு என்றால், சொல் வடிவமாகவும், சொல்லின் பொருள் வடிவமாகவும் இணைந்துள்ள ஒருவன், குருநாதர் வேடத்தை மேற் கொண்டு, குருந்தமரத்தடியில் அமர்ந்து பேசினால் அந்தப் பேச்சு எல்லா உயிரையும் பிணித்து ஈர்க்கும் பேராற்றல் வாய்ந்ததாய் இருக்கும் என்று சொல்லவும் வேண்டுமோ! திருவாதவூரர் மணிவாசகராக மாறிய பிறகு குருநாதர் திருவாயிலிருந்து வெளிப்பட்ட சொற்கள் மூன்று. கோல மார்தரு பொதுவினில் வருக என்பவையே அவை. பொதுவாகக் கட்டளைச் சொற்கள் மனத்தில் கிளுகிளுப்பையோ, மகிழ்ச்சியையோ உண்டாக்கா, ஆனால், குருநாதரின் இந்தக் கட்டளைச் சொற்கள் மணிவாசகரைப் பெரிதும் ஈர்த்துவிட்டன. குருநாதர் வாயிலிருந்து வேறு சொற்கள் ஏதேனும் வாராவா என்ற நினைவில் அடிகளார் அமிழ்ந்திருக்கும் நிலையில் குருநாதரே மறைந்துவிட்டார்.