பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இல்லையே! இந்தச் சரீரத்தோடுதானே அடியரின் இடையே அமர்ந்திருந்தார்? அப்படியானால் அடியரின் இடையே அமர்வதற்கு, எவ்வளவு மட்டமானதாக இருப்பினும், இந்தச் சரீரம் தடையில்லை என்ற நினைவு, இப்பாடலைப் பாடி முடித்தவுடன் அடிகளாருக்கு வந்திருக்க வேண்டும். இவ்வளவு தூரம் இந்த உடலைப் பற்றி நொந்துகொள்ள வேண்டிய காரணமென்ன? அடியார் கூட்டத்தோடு சேர்ந்து சிவபுரம் செல்ல முடியாமற் போனதற்குக் காரணம், இந்த உடம்புதான் என்ற எண்ணம் தோன்றியவுடன், தடையில்லை என்று நினைத்த இதே உடம்பை இழித்தும், பழித்தும் பாடுகிறார். இந்த நிலை நீடித்தால் இந்த உடம்பைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மீதுTர, அடிகளாரின் மனம் அதே வழியில் செல்லத் தொடங்கிவிடும். சிக்கலும் இக்கட்டும் நிறைந்த இந்த மனநிலையிலிருந்து அடிகளார் திரும்பியாக வேண்டும். அவர்வழியே விட்டால் அது நடைபெறாது என்று அறிந்த கூத்தன், சில விநாடிகள் பின்னோக்கிப் பார்க்கும் ஆற்றலை, (hind sight) அடிகளாருக்கு வழங்குகிறான். இப்பொழுது இந்த உடம்போடு இருக்கும் தாமேதான், ஒரு காலத்தில் கூத்தனின் திருவடியை இணைபிரியலாகாத ஒருவராக இருந்ததை அடிகளார் காண்கிறார். அதே கூத்தன்தான் தம்மை இந்த உடலுள் புகுத்தினான் என்பதையும் உணர்கின்றார். எனவே, இந்த உடம்பு வெறுக்கத்தக்க ஒன்றன்று. இந்த உடம்பினுள் உறுபொருள் அவன்தான் என்பதை உணர்கின்றார். நறுமலரில் இருந்து எழும் நாற்றம் அனுபவிக்கப்படலாமே தவிரப் பற்றக்கூடிய ஒன்றன்று என்ற நினைவு வந்தவுடன் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் (436) அவன் என்பதை உணர்கின்றார். பற்ற முடியாத அந்த நறுமணம் மலரிடத்துச் சென்று தங்குவதுபோல, பற்ற முடியாத