பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 உகந்து அன்பாய் நிற்பது என்பதும் மனத்தின் செயலே ஆகும். மணல் ஊற்றுப்போல் உள்ளே உருகுவதும் மனத்தின் செயலாகும். இந்த நான் தொழிற்படுவது என்பது மனம், மொழி மெய் என்று மூன்றினாலுமேயாம். தன்னை மறந்த அனுபவத்தில் மூழ்கியிருந்த நான்' அதிலிருந்து வெளிப்பட்டவுடன், தனது கருவிகளாகிய மனம், மொழி மெய் என்ற மூன்றினாலும் அந்தப் பொருளை நினைத்து வணங்கி, மலரிட்டு அருச்சிக்க வேண்டும் என்று நினைக்கின்றது. இது ஐந்தாவது நிலையாகும். இவ்வளவு விரிவாகப் பணிபுரிந்த நான் ஆறாவது நிலையில், அந்தப் பொருளைப் புல்லியும் புணர்ந்தும் அதனால் வரும் அனுபவத்தைப் பெறவேண்டும் என்ற நினைவுடன் தொழிற்படுகிறது. இது ஆறாவது நிலையின் முற்பகுதியாகும். - புல்லத் தொடங்கிய நான் பூண்டு கிடக்கும் அடுத்த நிலைக்குச் செல்கிறது. நான் தன் சுயமுயற்சியால் புல்லிப் புணரத் தொடங்கி, அதன் இறுதியில் புல்லப்பட்ட பொருளையே தன் வடிவமாகப் பூண்டு, செயலற்றுக் கிடக்கத் தொடங்கிவிடுகிறது. இது ஆறாவது நிலையின் உச்சகட்டமாகும். இந்த நிலைக்கும் மூன்றாவது நிலைக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. இவ்விரண்டு நிலைகளிலும் நான் என்பது செயலிழந்துவிட்டாலும், மூன்றாவது நிலையில் ஆடுதல், பாடுதல், தொழுதல் முதலிய செயல்கள் நடைபெறுகின்றன. அதாவது எவ்வளவு அடங்கினாலும், அந்த நான் ஆனந்த மேலிட்டால் பெருமளவு தன்னை மறந்தாலும், நானில் ஒரு பகுதி அனுபவிக்கின்றேன்’ என்ற எண்ணத்தைச் சிறிதளவு பெற்றிருப்பதால்தான் ஆடுதல் பாடுதல் முதலிய செயல்கள் நடைபெறுகின்றன.