பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 வாழாப் பத்து உலகிடை வாழும் சாதாரண மக்கள் நம்பிக்கை இழந்து வாழ விரும்பாதிருக்கின்ற நிலை உண்டு. மிகப் பெரிய ஆன்மீகவாதிகள், அருளாளர்கள், பக்தர்கள் என்பவர்களுக்குக்கூடச் சில சமயங்களில், இந்த வாழ்வு வேண்டா என்ற நினைவு தோன்றியுள்ளதை அறிய முடிகிறது. இறையன்பில் ஈடுபடும் தொடக்க நிலையில் உள்ளோர், இறையனுபவத்தை அவ்வப்பொழுது பெற்று ஏனைய நேரங்களில் உலகியலுக்கு வருவோர், உலகியலை அறவே மறந்து சதாசர்வ காலமும் இறையனுபவத்தில் மூழ்கியிருப்போர் ஆகிய மூன்று நிலைகளில் அருளாளர்கள் வாழ்க்கை நடைபெறுகின்றது. உலகியல் வாழ்க்கையில் உள்ளவர்கள் நம்பிக்கை இழந்து, வாழ்க்கையில் பிடிப்பில்லாமல் இருப்பது சாதாரணமாக நாம் காணும் காட்சி. ஆனால், அடுத்த மூன்று நிலையில் உள்ளவர்கள் ஏன் நம்பிக்கை இழக்க வேண்டும்? சாதாரண மக்களாயினும், ஆன்றோர்கள் ஆயினும், சான்றோர்களாயினும் உலகிடைப் பிறந்தவர்கள் முக்குணங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்கள் நாளில் பெரும்பகுதி தமோகுண வசத்தராவர். மூன்றாவது நிலையிலுள்ள அருளாளர்களும் கூட நாளில் மிகப் பெரும்பகுதி சத்துவகுண வசத்தராயினும் ஒரு விநாடி நேரம் தமோகுணத்திற்கு வந்து செல்வது இயல்பே யாகும். அருளாளர்கள் அனுபவிக்கும் இறையனுபவம், இறைப் பிரேமை என்பவற்றின் உண்மை அனுபவத்தைப் பெற வேண்டுமே யானால் ஒரு விநாடி தாமச குணத்தராதல் தேவைப்படும். உலகியல் முறையில் இதைக் கூறவேண்டுமே யானால், நிழலின் அருமை ஒரு விநாடி வெயிலில் போவதன்மூலம் அறியமுடியும் என்பதாம்.