பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அவர் ஆண்டிருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறார். அதனாலேயே ஆண்ட நீ என்று பேசுகிறார். ஆண்டான், தான் செய்யவேண்டியதை மறந்து விட்டால் ஒரளவிற்குத்தான் அடிமை அதனை நினைவூட்ட முடியும். அதற்குமேல் தன் விதியை நொந்துகொள்வதைத் தவிர அடிமை ஒன்றும் செய்ய முடியாது. அப்படி நொந்து கொள்கிற நிலையைத்தான் 'வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்' (48) என்றும், மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் (452) என்றும், உலகில் வாழ்கிலேன் கண்டாய் (454) என்றும் பாடியருளுகின்றார். முதற்பாடலில் ஆண்ட நீ அருளிலையானால் என்று வாளா கூறிவிட்டார். ஆனால், ஆட்கொள்ளப்பெற்றவர் எத்தகையவர் என்று அந்தப் பாடலில் சொல்லப் பெறவில்லை. ஆண்டவன்மட்டும் இத்தகையவன் என்று பேசப்பெற்றுள்ளது. அவ்வளவு சிறப்பாக ஆண்டவனை மட்டும் கூறிவிட்டு ஆளப்பெற்றவரைப்பற்றி ஒன்றும் கூறவில்லையானால் ஒரு சிறு குறை நேர்ந்துவிடுகிறது. இத்துணைச் சிறப்புக்களையுடைய ஒருவன் யாரோ ஒருவரை ஆட்கொண்டான் என்றால், ஆட்கொள்ளப் பெறும் தகுதி அந்த ஒருவரிடம் ஓரளவாவது இருந்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால், இத்துணைப் பெரியவன் அவரிடம் சென்றிருக்க முடியாது என்று நாம் கருதினால் அதிலொன்றும் தவறில்லை. இந்தக் கருத்தைப் போக்குதற்காகவே 449 ஆம் பாடல் 'வம்பனேன் தன்னை ஆண்ட மா மணியே’ என்று தொடங்குகிறது. வம்பனேன் என்ற சொல்லுக்கு வீணானனவன் என்பது பொருளாகும். அன்றியும், வம்பு என்ற சொல் புதுமை என்ற பொருளையும் தருமாதலால், வம்பனேன் என்பது, ஆட்கொள்ளப்பெற்றவர்களில் தாம் புதியவர் என்கிறார் அடிகளார்.