பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (குறள்:350) என்ற குறள்மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் அல்லவா? எனவே, அடிகளார் மனத்தில் அச்சம் பிறந்தது நியாயமானதே ஆகும். ஏனைய பற்றுக்கள் ஒழிக்கப்பெற்ற உடனேயே அவன் திருவடிகள் அடிகளாருடைய காலி மனத்தை நிரப்பியிருக்க வேண்டும். முன்னரே ஒருமுறை ஆண்டான் ஆகையால், இப்பொழுது அந்தக் திருவடிகள் அவரைத் தேடிவரவேண்டிய கடப்பாடுடையன. திருவடிகளுக்கு அப்படியொரு தேவையுமில்லை என்று விடை கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது. எல்லாவிதப் பற்றுக்களும் நிறைந்திருந்த மனத்தையும், அந்த மனத்தை உடையவரையும், இழுத்துப்பிடித்துத் தன்பால் விழச்செய்து, அந்த விநாடியே மனத்திலுள்ள பற்றுக்களையெல்லாம் அறவே போக்கி, அந்த மனத்துள் குடிபுகுந்த திருவடிதானே அது! ஆகவே, அடிகளாரின் வேண்டுதலில்லாமல், அவர் மனத்துட் புகுந்து குடியேறிய திருவடிகள், இருந்த இடத்தைக் காலி செய்துவிட்டுத் தாமாகவே வெளியேற எவ்வித உரிமையும் இல்லை. அவை குடியேறிய பின்னர் வேறு பற்றுக்கள் ஏதாவது அம்மனத்திடைப் புகுந்திருந்தால், “தேவையில்லாத பற்றுக்கள் புகுந்துவிட்டன. எனவே, தாம் அங்குக் குடியிருக்க முடியாது’ என்று சொல்லிவிட்டுத் திருவடிகள் வெளியேறலாம். ஆனால், அத்தகைய நிலை ஏற்படவில்லை என்பதைப் பற்று நான் மற்றிலேன் கண்டாய்” என்று பத்துப் பாடல்களிலும் அடிகளார் கூறிவிட்டார். வேறு பற்றில்லை என்று இவ்வளவு உறுதியாகக் கூறிய அடிகளார், பிறகு ஏன் கவலைப்படவேண்டும்? மனித