பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 இறையனுபவத்திலும் 'நான் செயலிழந்து மடங்க மடங்க இறையனுபவம் விரிந்து மேலோங்கிச் செல்கிறது. 'நான் மடங்கிவிட்ட நிலையில் பெறும் அனுபவத்தை மறுபடியும் நான் உயிர்த்தெழுந்து, முன்னர்ப் பெற்ற அனுபவத்தைப் பிரித்துக்கூறல் இயலாத காரியம். அதுவும் கவிதையாகக் கூறுதல் மிகமிக இயலாத காரியம். காதல் உணர்வே இப்படியென்றால், இறையனுபவம்பற்றிச் சொல்லவும் வேண்டுமோ! இந்நிலையில் நன்கு மூழ்கி அனுபவித்துவிட்டுப் பிறகு அந்த அனுபவத்திலிருந்து வெளியே வந்து, அந்த அனுபவத்தைத் திரும்பிப் பார்த்து, அது எவ்வாறு இருந்தது என்பதைக் கூறிய சிறப்பு அடிகளார் ஒருவருக்கே உரியதாகும். ஒரு விநாடியில் இறையனுபவக் காட்சியில் ஈடுபட்டு, அடுத்த விநாடியில் வெளிவந்து சுயநினைவுடன் பாடுவதால் திருவாசகப் பாடல்களில் பல சிக்கல்கள் தோன்றுகின்றன. இறைத் தத்துவத்தின் முடிந்த முடிபாகவுள்ள ஒரு கருத்தை அறிவுவாதத்தின் அடிப்படையில் நின்று 'மனவாசகங்கடந்தான்’ என்ற தொடரில் பாடுகிறார். அதே பாடலின் முதலடியில் எனை நான் என்பது அறியேன் பகல் இரவாவது அறியேன்” என்றால், இவை இரண்டும் எவ்வாறு பொருந்தும்? யாரோ ஒருவன் அடிகளாரை மத்த உன்மத்தன் ஆக்கினான். அதன் பயனாக எனை நான்' என்பது அறியாமல், பகல் இரவாவதும் அறியாமல் அறிவு, பொறி, புலன்கள் ஆகியவை செயலிழந்த நிலைக்குச் சென்றுவிடுகிறார் அடிகளார். உன்மத்தனாக ஆக்கப் பட்டமையின் நான், எனது, பகல், இரவு என்ற வேறுபாடுகள் தெரியவில்லை. இது தெரியவில்லை என்று பாடுகிறவர், இடையே தம்மை இவ்வாறு செய்தவன் மனவாசகங் கடந்தான் என்று கூறினால், இவை இரண்டும்