பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 கழல்களை ஏத்தினால் இங்கும் இவ்வுலகிலும்) அங்கும் (வீட்டுலகிலும்) சிறக்கமுடியும் என்பதை அறிவு கண்டிருக்கவேண்டும். மேலே உள்ளவற்றில் எதனைப் பயன்படுத்தியிருந்தாலும் சாதாரண அறிவுடையவர் எவரும் கழல்களை ஏத்தினால் இங்கு இனிதாக இருக்க முடியும் என்பதைக் கண்டிருக்க முடியும். இதனைச் செய்யாதவர்களை அறிவிலாதவர்' என்று அடிகளார் கூறுவதில் வியப்பு என்ன இருக்கின்றது? திருப்பாண்டிப் பதிகம் அடிகளாருடைய வாழ்க்கையையே திசைமாற்றிய நிகழ்ச்சி திருப்பெருந்துறை நிகழ்ச்சியாகும். அந்நிகழ்ச்சியில், பெருந்துறை நாயகனது கருணை வழிந்து ஓடி, எல்லா உயிர்களையும் ஆட்கொள்ளவில்லை. அக்கருணை வெள்ளம் திருவாதவூரர் என்ற தனிமனிதரிடமே பாய்ந்தது. இப் பாய்ச்சலால் அடிகளார் பெற்ற பேறுகள் பலவாகும். நிலையான இறையனுபவம், துறவு ஆகியவற்றோடு மிக முக்கியமான இரண்டு தனிப்பட்ட ஆற்றல்களையும் பெற்றார். ஒன்று, எதிரே உள்ளவரின் புறவடிவையும், உள்ளத்தையும் ஊடுருவிப் பார்த்து அவர் இன்னாரென அறிந்துகொள்ளுதல். இரண்டாவது, எதிரே உள்ளவரின் எதிர்காலம், முடிவு, மறுபிறப்பு என்பவைபற்றிக் கண்டபொழுதே அறிந்து கொள்ளுதல். இந்த இரண்டு ஆற்றல்களும் திருப்பெருந்துறையில் அடிகளாரிடம் வந்து எய்தின. இந்த இரண்டு மாபெரும் மாற்றங்களையும் அளவு மீறிய சிக்கனத்துடனேயே அடிகளார் கையாளுகிறார்.