பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/461

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 மரத்தடிக் குருவாகவோகூட வந்தாலும், அடிகளார் போன்ற ஒரு சிலரைத்தவிர அவனை இனங்கான முடியாது. மாபெரும் சிவபக்தனாகிய வரகுண பாண்டியனுக்கே அடையாளம் காணும் வாய்ப்பு இல்லையென்றால், ஏனையோர்களைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. அப்படியானால் சார்ந்தவர் சதிரை மறந்து அறியாமல் கொள்வர் (527) என்று கூறியது எவ்வாறு பொருந்தும்? இங்குச் சார்ந்தவர் என்பதற்குப் பொருள் என்ன? பாண்டிய மன்னனே வந்தவனை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை என்றால், ஏனையோர் அவனை அடையாளம் கண்டு எப்படிச் சாரமுடியும்? இங்கு ஓர் சிக்கல் தோன்றுகிறது. மனித மனத்தில் மூளையின்பாற்பட்ட அறிவுப் பகுதியும், உணர்வின்பாற்பட்ட நம்பிக்கைப் பகுதியும் இணையாகவே பணிபுரிகின்றன. ஒரு பொருளைப்பற்றி அறிவின் துணைகொண்டு அறிய முற்பட்டால் தருக்கமுறையில் ஆராய்ந்து, காரண, காரியத் தொடர்பை ஏற்றுக் கொண்டு, அப்பொருளை இன்னது என அறிந்து கூற முடியும். உணர்வின்பாற்பட்ட நம்பிக்கைப்பகுதி இதனின் முற்றிலும் வேறானது. அங்கே ஆராய்ச்சியோ தருக்கமோ பணிபுரிவதில்லை. பல சமயங்களில் அறிவு கூறுவதைக்கூட உணர்வு தூக்கியெறிந்துவிடுகிறது. அதன் பயனாக ஏற்படும் நம்பிக்கை, காரண- காரிய அறிவு ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது. இந்த நம்பிக்கைதான் மனிதனை ஒரளவு அமைதியாக வாழச்செய்கிறது. ஒரு பொருளின்மேல் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றால், அந்தப் பொருளை நேரடியாகக் கண்டோ கேட்டோ ஆகவேண்டும் என்ற தேவையில்லை. இதனாலேயே இறையுணர்வு, இறை நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை என்று கூறுகிறார்களே தவிர இறை அறிவென்றோ கடவுள் அறிவென்றோ கூறுவதில்லை.