பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-4.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 4 அடைக்கலமாகத் தம்மைத் தந்துவிடவேண்டும் என்று நினைத்துப் பாடியதுதான் அடைக்கலப்பத்து. அடைக்கலமாகப் புகுந்துவிட்ட பிறகு, இந்த உடலோடு இருந்தாலும் சரி, இந்த உடல் கழிந்து விட்டாலும் சரி. தேஜோமயமான அவன் திருமுகத்தையும் அதில் தோன்றும் புன்முறுவலையும் காணவேண்டும் என்ற ஆசை புதிதாகப் பிறந்தது. இந்த ஆசையைப் புதிது என்று சொல்வதற்கு ஒரு காரணமுண்டு. இதுவரை அவருக்கிருந்த ஆசை, திருப்பெருந்துறையில் இருந்ததுபோல, அந்த அடியார் கூட்டத்திடைப் புகவேண்டும் என்பதுதான். இப்பொழுது இறைவன் திருமுகத்தில் தோன்றும் புன்முறுவலைக் காணவேண்டும் என்ற ஆசை புதிதாகத் தோன்றியதை ஆசைப்பத்தில் வெளியிட்டார். இந்த மூன்று பத்துக்களிலும் வெளியிட்ட விருப்பம் எதுவும் நிறைவேறவில்லை. ஆனாலும், நம்பிக்கை தளரவில்லை. வழியோடு போன தம்மை, இழுத்துப் பிடித்துத் திருவடி தீட்சை செய்து ஆட்கொண்டவர் நிச்சயமாகக் கைவிடமாட்டார் என்ற எண்ணம். ஒருபுறம் நம்பிக்கையைத் தருகிறது. இதுவரை தோன்றிய எண்ணம் எதுவும் ஈடேறவில்லை என்ற நினைவு நம்பிக்கை இன்மையைத் தருகிறது. நம்பிக்கை, நம்பிக்கையின்மை என்ற இரண்டின் இடைப்பட்ட அடிகளார் தேய்புரிப் பழங்கயிறாக அவதியுறுகிறார். நம்பிக்கை இன்மையைச் சென்ற முப்பது பாடல்களில் பாடிய அவருக்கு, கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை மறுபடியும் துளிர்க்கிறது. எனவே, பழைய நிகழ்ச்சியை நினைந்து, இப்படிப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளதே என்று கூறும் முறையில் மனத்திடைத் தோன்றும் நம்பிக்கைக்கு ஒர் ஊன்றுகோல் தருகிறார். அதுவே அதிசயப் பத்தாகும்.