பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-5.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அற்புதப் பத்து 33 அப்பரம்பொருள் தன் எளிவந்த தன்மை காரணமாக குருநாதர் வடிவில் வந்து திருவாதவூரரை மணிவாசகராக மாற்றிற்று. இந்த நிகழ்ச்சியின் பயன் இப்படியே தொடர்ந்திருக்குமேயானால் இப்பாடல் தோன்றியிருக்க நியாயமேயில்லை. ஒருமுறை அக்காரம் தீற்றியவுடன் நடிப்பு ஒழிந்தது. பொய் ஒழிந்தது; நான் ஒழிந்தது; எனதும் ஒழிந்தது: தூய்மையே வடிவான மணிவாசகர் இங்கே நிற்கிறார். இவரை அடித்து அடித்து மறுபடியும் இந்த இறையனுபவத்தை உண்ணுமாறு செய்யவேண்டிய தேவை என்ன ? - மனித மனத்தின் ஒரு விநோதமான பகுதியாகும் இது. எல்லாவற்றையும் விட்டொழித்தவர்கள்கூட விட்டோம்’ என்ற எண்ணத்தை ஒழிப்பது கடினம். இந்த நிலையிலும் அடிகளாரைப் பொறுத்தவரையில் தம்முடைய பழைய வாழ்க்கைமுறை நினைவில் ஒரோவழித் தோன்றி மறைகின்றது. அது நினைவு மாத்திரையாய் வந்துபோயிற்றே தவிர, அடிகளாரின் வளர்ச்சிக்கோ முன்னேற்றத்திற்கோ எவ்விதத் தடையையும் செய்யவில்லை. என்றாலும், அந்த நினைவு வந்துபோகின்ற நேரம், இறையனுபவத்தில் மூழ்குகின்ற நேரத்திற்குத் தடையாகத்தானே வருகிறது? அப்பொழுது தாம் செய்த செயல்களை நினைந்துபார்த்து, அது சரியா தவறா என்ற ஆராய்ச்சியில் மனம் ஈடுபட்டிருத்தல் வேண்டும். அவரையும் மீறிய இந்த ஆராய்ச்சி நடைபெறுவதை அவரால் தடுக்க முடியவில்லை. காரணம், இறையனுபவத்தில் மூழ்கியிராத நேரமாகும் அது. இந்த நிலை நீடிக்காதபடி தில்லைக்கூத்தன் மறுபடி இறையனுபவத்தை அவருள் புகுத்துகிறான். விட்டு விட்டு வரும் இந்த மனோநிலையைத்தான் அடித்து அடித்து அக்காரம் தீற்றி என்கிறார் அடிகளார். .