பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

திருவிளையாடற்புராணம்


மகளிர் கற்பாலும், வேதியர் நல்லொழுக்கத்தாலும், அரசரின் நெறி முறையாலும் மழை பொழியும் என்று கூறுவர். வேதியர்கள் தம்முடைய கடமைகளைச் செய்யாததால் மழை பிழைத்துவிட்டது. கோயில் நற்பணிகளுக்கும் அரசன் அரண்மனையில் பொருள் வளம் இல்லை; இப்படித் தேய்ந்துவிட்ட நிலையில் வறுமையும் பஞ்சமும் தலைவிரித்து ஆடின; வேறு வழியில்லை.

வழிபடும் தெய்வமே அவனுக்கு வாழ்வு அளிக்க வேண்டி இருந்தது. இறைவன் அவன் கனவில் வந்து "அழியாத பொன் முடிப்பு" ஒன்று தந்து விட்டு மறைந்தார். கனவு மறைந்தாலும் முடிப்பு மறையவில்லை. "எடுக்க எடுக்கக் குறையாத அட்சய பாத்திரம் போன்று இந்த முடிப்பு உன்னிடம் தரப்பட்டுள்ளது. இதை வைத்து வேதியருக்கும் வேத நூல் கல்விக்கும் பயன் படுத்துக" என்று சொல்லி மறைந்தார்.

உலவாக்கிழியாகிய பொன்முடிப்பை எடுத்து தெய்வப்பணிகள் செய்தான்; வேதம் ஓதும் வேதியர்களை வாழ வைத்தான்; மறுபடியும் சோறும் சுகமும் மட்டும் அன்றி அறிவும் ஞானமும் பெருகி நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்தது.

மனிதர் சோறு மட்டும் தின்று வாழ்வதில்லை; தெய்வ வழிபாடு மட்டும் போதாது, கல்வியும் ஞானமும் பெருக வேண்டும். அவற்றை வளர்க்க வேண்டும். அதுவே நாட்டுக்குப் பெருமை தருவதாகும். தமிழருக்கு வள்ளுவர் குறள் அழியாச் செல்வம்; வடமொழியாளருக்கு வேதம் அழியாத செல்வம்; இத்தகைய உயர்ந்த நூல்கள் மாந்தரிடைப் பரவினால் அவர்கள் நன்னெறியோடு வாழ்வர். ஒழுக்கம் குறையாது; மழையும் பெய்யும் என்பதை இறைவன் இத்திருவிளையாடல் கொண்டு உணர்த்தினார்.