பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெய்க் காட்டிட்ட படலம்

97

அவரும் தன் குதிரையைத் தூண்டி நடையை நடத்திக் காட்டச் செய்து சேனை வெள்ளத்தில் மறைந்து சென்றார். அப்பொழுது வேடுவர் தலைவனான சேதி ராயன் புலி வேட்டைக்குச் சென்று உயிர் துறந்தான் என்ற செய்தியை ஒற்றர்கள் வந்து செப்பினர். பகை நீங்கியது: படைகள் கொட்டிலில் அடங்கச் சென்றன; அவை இருந்த சுவடு இன்றி அனைத்தும் மறைந்து விட்டன. இவ்வளவும் சிவன் காட்டியதே என்றும் அவர் திருவிளையாடலே என்றும் அரசன் அறிந்து அகமகிழ்வு கொண்டான்.

மெய்யன்பன் ஒருவனுக்காகத் தெய்வமே வீரனாக வந்து நின்றதும் சேனை வெள்ளத்தைக் காட்டியதும் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் ஆயின. சுந்தரசாமந்தனுக்கும் பாண்டியன் குண பூடணனுக்கும் நெருங்கிய உறவு மேலும் வளர்ந்தது. பொய்யை மெய்யாகக் காட்டிய இறைவன் திருவிளையாடல் அதனை நினைத்து இறைவன் பெருமையைப் பேசி மகிழ்ந்தனர். 

31. உலவாக்கிழி அருளிய படலம்

குணவீர பாண்டியன் தனமெல்லாம் தரும நெறியில் செலவழிக்கப்பட்டது. வளம் குன்றிவிட்டது. எனினும் அவன் இறைவனையே நம்பி விரதங்களைச் செய்து நியம நிட்டைகள் தவறாமல் வழிபட்டு வந்தான். தவவலியால் அந்தணர்களையும் வேத வித்தகரையும் அவன் மதிக்கவில்லை. அதனால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

வேதம் ஓதாமையாலும் வேள்விகள் நடத்தாமையாலும் மழை வளம் குன்றியது.

"மழை வளம் கரப்பின் வான் பேரச்சம் பிழையுயிர் எய்தின் பெரும் பேர் அச்சம்" என்று சிலப்பதிகாரம்கூறும்.