பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

திருவிளையாடற்புராணம்


"விசுவரூபன்" என அறிந்தான்.

ஆசிரியனுக்குரிய அடக்கம் சால்பு இவனிடம் காணப் படவில்லை. என்ன செய்வது? அவனைக் கொண்டு ஒரு வேள்வி நடத்துவது என்று தீர்மானித்தான்.

"குருவே! வேள்வி ஒன்று நடத்தித் தருக" என்று வேண்டினான். அதற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் வந்து குவிந்தன. யாகக் குழியில் தீ மூட்டப்பட்டது; நெய்க்குடங்கள் வந்து மொய்த்தன. ஓமகுண்டத்தில் அவி சொரிந்து வேள்விச் சடங்குகளைச் செய்தான். "இந்திரனுக்கு நன்மை உண்டாகுக" என்று சொல்லி மந்திரம் சொல்ல வேண்டியவன் தந்திரமாக "அசுரர்க்கு நலம் பெருகுக" என்று சொல்லிக் கொண்டான். இந்திரன் இதை அறிந்தான்.

"சாதி புத்தி இவனை விட்டு அகலவில்லை; நீதி நெறி முறைகளை இவன் கை விட்டான்; என் பொருட் செலவில் நடத்தும் இவ்வேள்வியைத் தனக்குப் பயன் படுத்துகிறான்" என்று சினந்து அவன் மூன்று தலைகளையும் இலைகளைப் போலக் கொய்து களைந்தான். அம் மூன்று தலைகளும் உயரப் பறந்தன. அவை மூன்றும் காடையும் ஊர்க்குருவியும் சிச்சிலிப் பறவையும் எனப் பறந்து மறைந்தன.

ஆசிரியனைக் கொன்ற பாவம் இந்திரனைச் சூழ்ந்து கொண்டது; அது ஒரு பூதம் போல் உருவெடுத்து இவனை மருட்டியது; எங்குச் சென்றாலும் அவனைத் தொடர்ந்து விரட்டியது; சேற்றிலே கால் வைத்தவன் சறுக்கி விழுந்த கதையாயிற்று.