பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

திருவிளையாடற்புராணம்

தன் தேவியோடு இளம் பூங்காவிற்குச் சென்றான்; அவளைக் கட்டி அணைப்பதற்கு முன் பூ மணம் கமழும் அவள் கூந்தலைத் தொட்டு மகிழ்ந்தான். கட்டிக் கரும்பே என்று பேசிக் கவிதை புனையும் அவன் மெய் தொட்டுப் பயின்று கூந்தலின் மணத்தை நகர்ந்தான். அவள் கூந்தல் மணம் அவனைக் கவர்ந்தது பக்கத்தில் வண்டுகள் அங்கே வந்து மொய்த்தன.

"அவன் அந்த வண்டைப்பார்த்து விளிப்பது போன்று ஒரு கவிதை புனைந்தான். "பூவுலகில் நீர் அறியாத பூ இல்லை; இவள் கூந்தலின் நறுமணத்தையும் நீ நுகர்கிறாய் பூவை நாடும் நீ இந்தப் பூவையரைச் சுற்றி வருவது ஏன்? எனக்கு ஒர் ஐயம் எழுகிறது; இந்த என் தலைவியின் கூந்தலின் மணம் பூவின் மணம் எந்த மணம் சிறந்தது? அதை எனக்குத் தெரிவி; நீ ஒரு பூக்களின் ரசிகன்; நான் பாக்களின் ரசிகன் என்று பாண்டியன் கூறினான். நீ சுற்றிவரும் பூக்கள் நிறம்மாறியவை, மணம் மாறியவை. கலைத் திறன் படைத்த அவற்றின் நிலைமை அறிவாய்

இத்தலைவியின் கூந்தலின் மணத்துக்கு நிகராக எந்தப் பூவின் மணம் உள்ளது. என்று கூறித் தலைவியின் நலம் பாராட்டினான் அந்த நினைவோடு அவன் அாசவை அடைந்தான்.

அக வாழ்க்கையில் ஏற்பட்ட ஐயம் அவனுக்கு ஓர் இலக்கியப் பிரச்சனையை உருவாக்கியது. அதைப் பொதுப்பட வைத்துப் புலவர்களின் ஆய்வுக்கு விட முற்பட்டான். எனினும் அவன் உள்ளக் கிடக்கையைப் பளிச்சிட்டுச் சொல்ல அவன் மானம் அவனைத் தடுத்தது. அதனால் அவன் ஒரு பொற்கிழியைக் கோயிலில் அவர்கள் முன் வைத்து ஓர் அறிவிப்புச் செய்தான், தான் உள்ளத்தில் நினைப்பதைக் கவிதையாக்கித் தந்தால் அவர்களுக்கு ஆயிரம் பொற்காசு என்று அறிவித்தான்.