பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்

141


புலவர்கள் அரசனின் கற்பனையை அறிய வாய்ப்பில்லை. அவன் சண்பகச் சோலை சென்றதும், பாண்டி மாதேவியின் நலம் பாராட்டியதும், அவ் ஏந்தல் கூந்தலைப் பற்றிவிசாரணை நடத்தியதும், அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் கவி யாதும் புனைய வில்லை; விடுகதை. என்று அதை விட்டுவிட்டனர்.

அந்த நிலையில் தருமி என்ற குடுமி வைத்த பார்ப்பன இளைஞன் இதனைக் கேள்விப்பட்டான். வயது ஆகியும் வாலிபப் பருவத்தில் மண வைபவத்தை அவன் கண்டது இல்லை. வறுமை அவனைச் சிறுமைப்படுத்தியது. மணம் செய்து கொள்ள ஆசை இருந்தது. பணம் இல்லை என்பதால் ஏங்கிக் கிடந்தான். கோயில் தெய்வத்திடம் முறையிட்டால் ஓசியில் கவிதையாவது கிடைக்காதா என்ற நினைவு ஓடியது

இறைவனிடம் பொன்னும் பொருளும் நேரிடையாகக் கேட்கவில்லை; கவிதை ஒன்று தந்தால் அதைத் தான் காசாக்கிக் கொள்ள முடியும் என்று இறைவனிடம் முறையிட்டான்.

"அகப்பொருட்பாடல் வேண்டுமா?

புறப் பொருள் பாடல் வேண்டுமா? எது வேண்டும்?" என்று தெய்வக் குரல் எழுந்தது.

"காதற்பாட்டு வேண்டும்; அவ்வளவுதான்; அகமா புறமா இது எல்லாம் எனக்குத் தெரியாது" என்று கூறினான்.

கவிதை ஏடு ஒன்று அவன் முன் வந்து விழுந்தது. அதனை நாடி எடுத்துப் படித்துப் பார்த்தான்.