பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

திருவிளையாடற்புராணம்


புராணங்களும் தெய்வங்களைப் பற்றியும் கடவுளரைப் பற்றியும் கதைகள் கூறுகின்றன. இந்திர உலகம் எங்கே இருக்கிறது. சிவ லோகம் எங்கே உள்ளது. வைகுந்தம் பிரம லோகம் என்பவை வரை படங்களில் இல்லையே என்று கேட்டால் இப்புராணங்களுக்கே இடமில்லாமல் போய்விடும். இவை எல்லாம் மானிடர் உயர்வதற்குச் சொல்லப்படும் கதைகள். இவற்றில் பொருள்குற்றம் காண்பது பிழையாகும்.

அகத்தியர் சென்ற பின்பு மீனாட்சி அம்மையார் அகத்தியரைக் கொண்டு ஏன் நீர் இலக்கணம் சொல்லித் தர வேண்டும்? நீரே நேரில் சொல்லித் தரக் கூடாதா என்று சோமசுந்தரரைக் கேட்டார். அதற்கு அவர் "நக்கீரன் எதிர்க்கட்சியில் இருந்து பழகியவன். அதனால் ஆளும் கட்சி எது சொன்னாலும் குற்றம் காண்பது அவன் இயற்கை; செவி கொடுத்துக் கேட்க மாட்டான் . நம்பவும் மாட்டான். அதனால் தான் அகத்தியரைக் கொண்டு சொல்ல வேண்டுவதாயிற்று" என்று விளக்கினார். 

55. சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்

தமிழ்ச் சங்கம் முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று இருந்தன. கடைச் சங்கமே மதுரையில் நிலவியது; கபிலர், பரணர், நக்கீரர் இம்மூவரும் கடைச் சங்கப் புலவர்கள் எனக் கருதப்படுகின்றனர். முதற் சங்கப் இடைச் சங்க காலத்தில் எழுந்த நூல்கள் கிடைத்தில. அவற்றின் பெயர்களே அறியப்படுகின்றன. கடைச் சங்க காலத்து நூல்களே எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் ஆகும்.