பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

திருவிளையாடற் புராணம்


வந்திக்கு விமானம் வந்தது; அவளுக்கு வானவர் வரவேற்புத் தந்தனர். விண்ணுலகவாசியாக அவள் அங்கு அனுமதிக்கப்பட்டாள்.

மாணிக்க வாசகரிடம் அரிமர்த்தன பாண்டியன் சென்று வணங்கித் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்: "எல்லாம் இறைவன் திருவிளையாடல்" என்று கூறி அரசனிடம் அமைச்சர் பதவியிலிருந்து விலகி நின்றார்:

திருவாசகம் பாடித் தெய்வ அருள் வாக்கைப் பரப்பினார் சிதம்பரம் சென்று நடனத் தலைவனைக் காண விடைபெற்று மதுரையை விட்டு நீங்கினார். அரசனின் தொடர்பு நீங்கி ஆனந்தத் தாண்டவம் ஆடும் பேரின்பப் பொருளையே நினைத்து அல்லும் பகலும் அவன் புகழ்பாடி இறையுணர்வு நிரம்பியவராக வாழ்ந்தார்.

அங்கே சோழ அரசனின் மகள் ஊமையாக இருந்தாள். அவளைப் பேச வைத்தார். புத்தர்களோடு வாதிட்டு வென்று சைவ சமயத்தை நிலைநாட்டினார். தமிழும் சைவமும் தழைக்க அவர் பணி தொடர்ந்தது; அங்கேயே அவர் முத்தி நிலையையும் அடைந்தார். 

62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

அரிமர்த்தன பாண்டியனுக்குப் பின் அவன் சந்ததியர் ஆட்சிக்கு வந்தனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவன் கூன் பாண்டியன் என்பவன் ஆவான். அவன் சோழ மன்னனின் மகள் மங்கையர்க் கரசியரை மணந்து வாழ்ந்து வந்தான். சோழ நாட்டில் இருந்து அரசியோடு குலச்சிறை என்ற அமைச்சர் உடன் வந்தார்.