பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

திருவிளையாடற் புராணம

வேண்டும்; அவர்களைத் தொடர்ந்து வழிபட வேண்டும்; அதற்கு உபாயம் யாது என்று கேட்டாள். அதற்கு அவன் மதுரைத் தலத்தின் மகிமையைக் கூறி அது பூலோகச் சிவலோகம் எனப்படும் என்றும், அங்குள்ள மீனாட்சி கோயிலுக்குச் சென்று வழிபடுவதே உயர்வு தரும் என்றும் கூறினான்: உய்யும் நெறி அறிந்து உலக அன்னையின் திருவடிகளுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அல்லும் பகலும் வழிபட மதுரை வந்து சேர்ந்தாள். அங்குத் தனி ஒருத்தியாக இருந்து விரதங்கள் பல நோற்றாள். மீனாட்சியம்மையின் கோயிலுக்குத் தினந்தோறும் சென்று வழிபட்டாள். உணவு உட்கொள்ளுதலைச் சுருக்கிக்கொண்டு ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கும் உத்தமச் செயலில் ஈடுபட்டாள். நாளைக்கு ஒரு வேளையே உண்டு வந்தாள். தை மாதம் தொடங்கி மார்கழி வரை பன்னிரண்டு மாதம் விரதங்கள் அனுஷ்டித்து உணவைச் சுருக்கிக் கொண்டு வந்தாள். தையில் பகலில் ஒரு வேளை உண்டாள்; மாசியில் இரவு மட்டும் உண்டாள்; பங்குனியில் கிடைத்ததை உண்டு காலம் கழித்தாள்; சித்திரையில் இலை தழைகளையும், வைகாசி மாதம் எள்ளுப்பொடியையும் உண்டு வந்ததாள்; ஆனியில் சந்திராயன விரதம் மேற்கொண்டாள்; ஆடி மாதத்தில் பசுவின் பஞ்சகவ்வியத் துளியையும், ஆவணியில் பாலும், புரட்டாசியில் தண்ணிரும், ஐப்பசியில் தருப்பைப் புல்லில் நிற்கும் பனிநீரும் கார்த்திகையில் வெறும் காற்றையும் உண்டாள்; மார்கழியில் முழுப்பட்டினி கிடந்தாள், தை மாதம் பிறந்ததும் கோயில் சந்நிதியை அடைந்து மீனாட்சியம்மையைத் துதித்து யாழ் எடுத்து இன்னிசை மீட்டிப் பாடினாள்; மீனாட்சி அம்மையின் அருட்செய்கைகளை அழகாகப் பாடினாள்.