பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

திருவிளையாடற் புராணம்

பட்டம் ஏந்தி நாட்டை மனுநீதியின்படி அரசாண்டு வந்தாள் கன்னிப்பருவம் அடைந்த நிலையில் அவள் அழகு ஈடு இணையற்று விளங்கியது; இடை இறுகியது; வனப்புமிக்க முலை இறுமாப்பு எய்தியது; கருங்குழல் கற்றை இருளையும் வென்றது; யாழினும் இனிய தீஞ்சொல்லும் இனிய நகையும் கூடிய நிலையில் மணப் பருவம் வந்துற்றதால் அவள் அன்னை காஞ்சனை அவள் மணத்தைப்பற்றிக் கவலை கொண்டாள்.

"கன்னிப்பருவம். வந்தும் கனிவு மிக்க மணவாழ்வு வாய்க்கவில்லை" என்று ஏங்கினாள்; அதனைத் தன் மகளிடம் தெரிவித்தாள்.

"அன்னையே! நீ நினைப்பது எல்லாம் உடனே நடந்துவிடும் என்று கூற முடியாது; ஆகும்போது ஆகும்; நீ கவலைப்படாதே; யான் போய்த் திசைகள் நான்கும் சென்று நாடுகள் அனைத்தையும் வென்று வீடு திரும்புவேன்" என்று கூறி உடனே எழுந்து திக்கு விசயம் செய்யப் புறப்பட்டாள்.

அரசியின் திருவுளச் செய்தி அறிந்து அமைச்சர்களும் படைத்தலைவர்களும் உடன் புறப்பட்டனர். தேரும் வந்து சேர்ந்தது; சங்குகள் முழங்கத் தடாதகை தேரில் ஏறிப் புறப்பட்டாள். வாத்தியங்கள் முழங்கின; யானை, குதிரை, தேர், காலாள் என்னும் நால்வகைப் படைகளும் உடன் சென்றன. சுமதி என்னும் அமைச்சன் மற்றொரு தேரில் ஏறிச் சென்றான். நங்கை தன் குறிப்பு நோக்கி நாற்பெரும்படையும் செல்ல அம்மையார்தம் செங்கையில் பிரம்பு தாங்கிச் சேவகம் செலுத்திச் சென்றாள்.

கஜபதி, துரகபதி, நரபதி முதலாய வடபுலக் காவல் வேந்தர் புயவலி அடங்க வெற்றி கொண்டாள். யானை,