பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாயப்பசுவை வதைத்த படலம்

93

அசுரப் பசு இச்சை கொண்டு தன் செயலை மறந்து அதைக்கண்டு ஏங்கி அடங்கி ஒடுங்கி மயங்கிக் கல்லாகச் சமைந்து விட்டது. அது கண்ட தென்னவனும் நகர மாந்தரும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர். ஏவி விட்ட சமணர் கட்டிய உடையோடு ஒட்டம் எடுத்தனர்.

எருது வடிவத்தில் வந்த அந்தத் தோற்றம் பெருமை மிக்கதாக விளங்கியது. வாலை உயர்த்திக் கொண்டு நிமிர்ந்த நடையோடும் வளைந்த கொம்போடும் வீறு கொண்ட பார்வையோடும் விளங்கிய அக்காளை அவர்களைக் கவர்ந்தது. அப்பெருமைமிக்க எருது நிலை பெற்றுக் காட்சி அளிக்கவேண்டும் என்று அரசனும் மற்றிையோரும் இறைவனை வேண்டிக் கொண்டனர். பருமையான அவ்வடித்தை அங்கேயே விட்டுவிட்டு நுண்மையான ஆவி வடிவத்தில் அவ் எருது ஆண்டவன் திருச்சந்நிதியை அடைந்தது. அந்த எருது ஒரு மலையாக நிலைத்து விட்டது. அதனை இடபமலை என்று செப்பி அனைவரும் வணங்கத் தொடங்கினர்.

இராமன் சீதையைத் தேடித் தென்திசை சென்ற போது வழியில் மதுரை வழியாக வானரங்களோடு சென்றனன். இவ்இடபமலையில் அகத்தியரோடு தங்கி அவர் சொல்லியபடி தாமரைக் குளத்தில் முழுகி இறைவனை வணங்கி அவர் அருளும் ஆசியும் பெற்றுத் தென்னிலங்கை சென்று இராவணனோடு போரிட்டுச் சீதையை மீட்டான். மதுரையில் இராமனும் இலக்குவனும், வானரமும் தங்கிய இடம் அது என்று இன்னமும் பேசப்பட்டு வருகிறது. மறுபடியும் திரும்பி வந்த போதும் அவர்கள் சோம சுந்தரக் கடவுளை வணங்கிப் பின் அயோத்தி அடைந்தனர் என்று கூறப்படுகிறது.