பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

107


'ஏதம் அறக் கண்டவர்கள், ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நின்றவனைச் சேதனனைச் சேதனனிலே செலுத்திச் சிற்பரத்தராயிருப்பர்; இன்றும்’ என இயைத்துப் பொருள் கொள்க. இங்கு ஏதம் என்றது, உயிர்களை அநாதியே பிணித்துள்ள ஆணவமலம் கழலும் பக்குவம் அடைதல் வேண்டி அம்மலத்தின்வழி மறைந்துநின்று உயிர்களை இருவினைகளிற் செலுத்தும் இறைவனது மறைப்பாற்றலாகிய திரோதான சத்தியை. ஏதம் அறுதலாவது, ஆன்மாவின் மலம் கழலும் பக்குவத்தைப் பெறுமாறு உயிர்களை இருவினைகளில் தூண்டித் தொழிற்படுத்தி இருவினைப்பயனாகிய புண்ணியபாவங்கட்கேற்ப அவ்வுயிர்களைத் துறக்க நிரயங்களிற் செலுத்தி நுகர்விக்கும் திரோதான சத்தியே, மலம் கழன்ற பக்குவநிலையிலே அருட்சத்தியாய் மாறி உயிர்கள் இறைவனை யுணர்ந்து கூடுதற்குத் துணையாய் நின்று அருளுதல். இதன் இயல்பினை முற்சினமருவு திரோதாயி கருணை யாகித் திருந்திய சத்திநிபாதம் திகழுமன்றே” (சிவப்பிரகாசம்-48) என உமாபதி சிவனார் விரித்து விளக்கியுள்ளமை இங்கு எண்ணத்தகுவதாகும். ஆதனம் - இருத்தற்குரிய இடம்; என்றது தத்துவங்களை. ஆதனி- அவ்விடத்தில் இருக்கும் பொருள்; என்றது உயிர்த் தொகுதியினை. ஆதனமும் ஆதனியுமாய் நிறைந்து நின்றவன் என்றது, உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து யாண்டும் நீக்கமற நின்ற இறைவனை. இச்செய்யுளில் முதற்கண் உள்ள சேதனன் என்றது ஞானசிரியனாகிய குருவினையும், அடுத்துள்ள சேதனன் என்றது அறிவுடைப் பொருளாகிய ஆன்மாவையும், சேதனனிலே " என்புழிச் சேதனன் என்பது, ஞானமேயுருவாகிய இறைவனையும் குறித்து நின்றன. சேதனனைச் சேதனனிலே செலுத்தலாவது, குருவருளால் மெய்யுணர்வு பெற்ற ஆன்மா தன்னைச் சிவனுக்கு உடைமைப் பொருளாகச் சிவனிடத்தே ஒப்புவித்தல். இன்று என்பது, உயிர் உடம்போடு கூடி நிற்கும் இம்மை நிலையினைக் குறித்து நின்றது. இன்றும் என உம்மை வருவித்துப் பொருளுரைப்பர் தில்லைச் சிற்றம்பலவர்.


68. தாமடங்க விந்தத் தலமடங்குந் தாபதர்கள்

தாமுணரி னிந்தத் தலமுணரும்-தாமுனியிற்

பூமடந்தை தங்காள் புகழ்மடந்தை போயகலும்

நாமடந்தை நில்லாள் நயந்து.

இது, சிவஞானிகளாகிய தவச் செல்வர்களின் பெருமையினையும் அவர்களை இகழ்வதனால் உயிர்கட்கு உளவாம் சிறுமையினையும் விளங்க விரித்துரைக்கின்றது.

(இ-ள்) சிவமாந்தன்மை பெற்ற தவச் செல்வர்கள், உலகமெலாம் உய்தல் வேண்டுமென்னும் பெருங்கருணையுடன் சிவனருளில்