பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


திருநனிபள்ளியிற் பாலைநெய்தலாகப் பாடியதும், மதுரையில் வைகையாற்றிலே திருப்பதிக ஏடு எதிரேறப் பாடியதும், கூன்பாண்டியனது வெப்புநோய் தீர்த்ததும், மயிலாப்பூரிலே எலும்பைப் பெண்ணாக்கியதும் ஆகிய இவை, அழகிய புகலிவேந்தராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் சிவனருளால் நிகழ்த்தியருளிய அற்புதச் செயல்களாம் எ-று.

புகலி, என்பது சீகாழிப் பதிக்குரிய பன்னிரண்டு திருப்பெயர்களுள் ஒன்று. அவுணர்களால் இடர்ப்பட்டு அஞ்சிவந்த இந்திரன் முதலிய தேவர்களுக்கு அச்சமகலப் புகலிடம் ஆயினமையால் புகலியென்பது காரணப்பெயர். இத்தகைய புகலிப்பதியில் தோன்றினமையால் திருஞானசம்பந்தர்க்குப் புகலிவேந்தர் என்பது பெயராயிற்று.

ஆளுடையபிள்ளையார் இறைவன் திருவருளால் நிகழ்த்தியருளிய அற்புதச் செயல்களைத் திருத்தொண்டர் புராணமாகிய பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்திற் காண்க.


71. கொல்கரியி னீற்றறையி னஞ்சிற் கொலைதவிர்த்தல்
கல்லே மிதப்பாய்க் கடனீந்தல்- நல்ல
மருவார் மறைக்காட்டில் வாசல் திறப்பித்தல்
திருவாமூ ராளி செயல்.

இது, திருநாவுக்கரசு நாயனார் செய்தருளிய அற்புதங்கள் பலவற்றைத் தொகுத்துக் கூறுகின்றது.

(இ-ள்) பல்லவ மன்னன் ஆணை பெற்றுச் சமணர்கள் விடுத்த கொல்கின்ற மதயானையினின்றும், (அடைத்துத் தாளிட்ட) நீற்றறை யினின்றும், வஞ்சனையாற் பாற்சோறொடுகலந்து கொடுத்த) கொடிய நஞ்சினின்றும் கொல்லுந் தன்மையினைப் போக்கியதும், (சமணர்கள் கல்லொடு பிணித்துக் கடலில் தள்ளிய நிலையில்) தன்னொடு பிணிக்கப்பட்ட கல்லையே தெப்பமாகக் கொண்டு கடலினின்றும் கரையேறியதும், நல்ல மணம் பொருந்திய திருமறைக் காட்டிலே நெடுங்காலம் வேதங்களால் அடைக்கப்பட்டிருந்த திருக்கதவம் திறக்கும்படி திருப்பதிகம் பாடியருளியதும் ஆகிய இவை, திருவாமூரை ஆள்வோராகிய திருநாவுக்கரசு நாயனார் சிவபெருமான் திருவருளால் நிகழ்த்தியருளிய அற்புதச் செயல்களாகும். எ-று.

இவற்றின் விரிவினைத் திருத்தொண்டர் புராணத்தில் திருநாவுக்கரசு நாயனார் புராணத்திற் கண்டுணர்க. கொல்கரி-கொல்லும் இயல்பினதாகிய மதயானை. இதன்கண் அடைமொழியாக வந்த “கொல்”