பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


ஆன்மாவின் மலமாசு போக்க ஆன்மாவின்கண் தன்னியல்பு விளங்க அவையேயாய் விரிந்து அருள்சுரக்கும் சிறப்பியல்புடையது என விளக்குகின்றது.

(இ-ள்) அதுவென்றும் இதுவென்றும் ஒருபொருளைச் சுட்டி யறிதலின்றி எல்லாவற்றையும் ஒருங்கேயறியும் பேரறிவுப் பொருளாகிய அதுவே, இவ்வாறு ஆன்மாவின் பக்குவ காலத்து இத்தகைய மானிடவுருத் தாங்கிக் குருவாய் எழுந்தருளியது என்று அறிவாயாக. அப்பரம்பொருள் எங்கும் விரிந்த ஞானமாகிய சடையினையுடைய சிவனே என்று உணர்வாயாக எ-று.

“அது இது என்னாது” என்றது, உயிர்களாகிய நம்மைப்போன்று ஒருபொருளை ஏகதேசமாகச் சுட்டியறியாமல் என்றவாறு. “அனைத்து அறிவாகும் அது” என்றது, அனைத்துப் பொருள்களையும் இருந்தாங்கே யறியும் இயல்பினதாகிய சிவபரம்பொருளை. அனைத்தும் என்புழி முற்றும்மை தொக்குநின்றது; செய்யுளாதலின் இரண்டாமடியில் உள்ள “அது இது’’ என்பது, சிந்தைக்கும் மொழிக்கும் அப்பாற்பட்ட சிவபரம்பொருளாகிய அதுவே, குருவாகிய இத்திருமேனிகொண்டு எழுந்தருளி இவ்வான்மாவே சிவம் என்னும்படி பிரிவின்றி ஒன்றாகத் திகழ்கின்றது என்னுங் கருத்தினதாகும்.

“அதுபழச் சுவையென அமுதென வறிதற்
     கரிதென வெளிதென அமரரும் அறியார்
இதுவவன் திருவுரு இவனவ னெனவே
     எங்களை யாண்டுகொண்டு இங்கெழுந்தருளும்”

எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழி இங்கு நினைத்தற்குரியதாகும். இதன்கண் அது இது என்னும் தொடரைக் கூர்ந்துணர்க. சடையென்பது ஞானத்தையுணர்த்தும் குறிப்பினதாதலின் ஞானத்திரளாய் நின்ற இறைவனுக்குச் சடையான் என்பது பெயராயிற்று. அவிழ்தல் என்றது, எல்லாத் திசைகளிலும் விரிந்து பரவுதல் என்னும் குறிப்பினதாகும். எனவே “அவிழ்ந்த சடையான்” என்னும் இத்தொடர் ஞானமே யுருவாய் எங்கும் விரிந்து பரவியுள்ள சிவபரம்பொருளே தன் பெருங்கருணைத்திறத்தால் ஆன்மாக்களைத் தன் அகத்திட்டுக் கொண்டு அவையேதானாய் விளங்கவல்ல வியாபகப் பொருளாதலைச் சுட்டி ஏதுப்பொருளதாய் நின்றது.

இத்திருவுந்தியாரின் சொற்பொருட் கூறுகளை விளக்கும் முறையி லமைந்தது பின்வருந் திருக்களிற்றுப்படியார் பாடலாகும்.