பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


அடியொற்றியமைந்துள்ளமை காணலாம். இத்தகைய இறைவனை நம் கண்ணாலே காண வொண்ணாதோ என வினவிய மாணாக்கனை நோக்கிக் கூறுவதாக அமைந்தது, அடுத்துவரும் திருக்களிற்றுப்படியாராகும்.


89. இன்றுதா னீயென்னைக் கண்டிருந்துங் கண்டாயோ
அன்றுதா னானுன்னைக் கண்டேனோ-என்றால்
அருமாயை யீன்றவள்தன் பங்கனையார் காண்பார்
பெருமாயைச் சூழல் பிழைத்து.

இது, கடவுள் உயிரறிவாற் காணுதற்கு அரியன் என்கின்றது.

(இ-ள்) இப்பொழுது நீ என்னைக் கண்டு இவையெல்லாம் அறிந்து கொள்ளும் இந்நிலையிலும் என்னுடைய சொரூபத்தை உன் னுடைய ஊனக்கண்ணால் கண்டனையோ? அன்றி இவற்றையெல்லாம் அறிந்து உனக்கறிவிக்கின்ற நான்தான் உன்னுடைய ஆன்ம சொரூபத்தைக் கண்டேனோ? (ஒரெல்லையுட்பட்டு அணுகியுள்ள நாமிருவரும் ஒருவ ரொருவரது ஆன்ம சொரூபத்தைக் கண்டதில்லை) என்றால், யாவராலும் காணுதற்கரிய மாயையினின்றும் இவ்வுலகங்களையெல்லாம் ஈன்றளித்த அம்மையை ஒருபாகத்திலேயுடைய இறைவனே விரிந்து பெரியதாய்த் தம்மை மறைத்துக் கொண்டுள்ள மாயையாகிய சூழலினின்றும் நீங்கி ஊனக்கண்ணால் காணவல்லார் யாருளர்? (ஒருவரும் இல்லை) எ-று.

உயிர்கட்கு இன்றியமையாத உடல் கருவி உலகு நுகர்பொருள்கள் தோன்றுதற்கு முதற் காரணமாய் இறைவனுக்கு உடைப்பொருளாய் அருவாய் உள்ளது மாயையாகிய சடசத்தி என்பார் “அருமாயை” என்றார். மாயையீன்றவள்-மாயையாகிய முதற்காரணத்தினின்றும் மன்னுயிர்கட்கு இன்றியமையாத தனுகரண புவன போகங்களைத் தோற்றுவித்தருளிய சத்தி. பங்கன்-மாதொரு பாகனாகிய சிவன். ‘அருமாயை யீன்றவள்தன் பங்கனைப் பெருமாயைச்சூழல் பிழைத்துக் காண்பார் யார்’ என இயையும்.


90. கடலலைக்கே யாடுதற்குக் கைவந்து நின்றுங்
கடலளக்க வாராதாற் போலப்-படியில்
அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவு மெல்லாங்
கருத்துக்குச் சேயனாய்க் காண்.

இது, காண்டற்கரிய கடவுள் மன்னுயிர்களை ஆட்கொண்டருளுமாறு இதுவென வுணர்த்துகின்றது.