பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

149


(இ-ள்) விரிந்து பரவிய கடலானது தன் அலைக்கைகளினாலே மக்கள் நீராடுதற்கு ஒர் எல்லையுட்பட்டு அணுகி வந்தாலும் அக் கடலின் அகலம் நீளம் ஆழம் என்பவற்றை ஆராய்வார்க்கு அளவுட்பட்டு வாராது அப்பாற்பட்டு நின்றாற் போன்று, இறைவன் இந் நிலவுலகத்திலே பேரன்பு செய்த அடியார்களை மானுடத்திருமேனி கொண்டு எழுந்தருளி வந்து ஆண்டருளியதும் சிந்தையாலும் அறியவொண்ணாமல் சேயனாய் நின்ற அந்நிலையிலேயேயென்று அறிவாயாக எ-று.

கடல் தன்கண் நீராடுவார்க்கு அலைக்கைகளால் அணுகியதாயினும் தனது அகலம் நீளம் ஆழம் ஆகியவற்றை அறிய முயல்வார்க்கு அரிதாய் அகன்று நின்ருற்போன்று இறைவனும் தன்பால் அன்புடையார்க்கு அருளுந் திறத்தில் எளியனாயினும் தன் ஆன்மபோதத்தால் தன்னை ஆராய முயல்வார் கருத்துக்குச் சேயனாம் அருமையுடையான் என்றவாறு.


'அருபரத்தொருவன் அவனியில் வந்து
குருபரனாகி யருளிய பெருமையை’ {போற்றித் திருவகவல்)

எனவும் ,

“அருமையிலெளிய அழகேபோற்றி” (௸)

எனவும்

வரும் திருவாசகத் தொடர்கள், இறைவன் அடியார்க் கருள்புரிதல் வேண்டிப் புவனியிற் சேவடி தீண்டக் குருவாய் எழுந்தருளும் எளிமையுடையனாயினும் அவனைத் தற்போதத்தால் அறிய முயல்வார் கருத்துக்கு மிகவும் சேய்மை நிலையில் நிற்கும் அருமைநிலையினன் என்னும் உண்மையை நன்கு புலப்படுத்தல் காணலாம்.


91. சிவனெனவே தேறினன்யான் என்றமையா லின்றும்
சிவனவனி வந்தபடி செப்பின் - அவனிதனில்
உப்பெனவே கூர்மை யுருச்செய்யக் கண்டமையால்
அப்படியே கண்டாய் அவன்.

இது, மன்னுயிர்களுக்குக் குருவாக வந்தருள்புரிபவன் சிவனெனவே தெளிக என அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) தமக்கு மெய்யுணர்வளித்த ஞானசிரியனைச் “சிவனென யானுந்தேறினன் காண்க” எனத் திருவாதவூரடிகள் குருவே சிவனெனக் கூறிய முறைமையால், சிவபெருமான் நம்மை உய்வித்தருள்