பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


புரிதல் வேண்டி மானுடத்திருமேனி தாங்கிப் புவனியில் எழுந்தருளி வந்த முறையை சொல்லுமிடத்து, உலகில் உவர் நீரிலுள்ள நுண்ணிய உவர்த்தன்மையானது உப்பென உருவங்கொண்ட தன்மையினைக் கண்டமையால் மாணவனே நூலுணர்வுணரா நுண்ணியோனாகிய அச்சிவபெருமானும் அருளாலே திருமேனி கொண்டெழுந்தருளியதும் அப்படியே யென்றறிவாயாக எ-று.

“அனைத்தறிவாகும் அது இது” என்னுந் திருவுந்தியார் தொடருக்கு அமைந்த விளக்கவுரையாக அமைந்தது இத்திருக்களிற்றுப்படியாராகும். அனைத்தறிவாகும் அதுவே இது” எனத் தேற்றேகாரம் விரித்துரைக்கப் பெற்றது.

“புவனியிற் சேவடி தீண் டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை யாட்கொண் டருளினன் காண்க” (திருவண்டப்பகுதி)

எனவரும் திருவாதவூரடிகள் வாய்மொழி அருபரத்தொருவனாகிய இறைவனே அன்புடைய அடியார்கள் பொருட்டுக் குருபரனாகி எழுந்தருளுகின்றான் என்னும் மெய்ம்மையினை வலியுறுத்தல் காணலாம்.

“எழுத்தறிவித்தவன் இறைவனாகும்”

என்பது பொதுநிலை. “குருவே சிவன்” என்றது சிறப்பு நிலை.


௪அ. அவனி வனான தவனரு ளாலல்ல
திவனவ னாகானென் றுந்தீபற
என்று மிவனேயென் றுந்தீபற.

இது, தூயோனாகிய சிவன் ஆன்மாவைச் சிவமயமாய் ஆக்குதற்குக் காரணம் அவனது பெருங்கருணையே யென்கின்றது.

(இ-ள்) உரைமனங்கடந்த சிவனகிய அவன், இவ்வான்மாவாக ஆகியது தன்னுடைய பெருங்கருணையாலல்லது இவ்வான்மா அச்சிவனாக மாட்டான் என்க. எக்காலத்தும் இவ்வான்மா சிவனுக்கு அடிமையென்றறி வாயாக எ-று.

அவன்-சிவன். இவன்-ஆன்மா. ஆன்மா சிவமாதல் என்பது, சிவனருளால் நிகழ்வதன்றி ஆன்மாவின் முயற்சியால் அன்று என்பார், “அவன் இவனாவது அவனருளாலல்லது இவன் அவனாகான்” என்றார். சிவமாதல் என்ற தொடரில் ஆதற்கு வினைமுதல், எல்லாம்வல்ல முதல்வனே யன்றிச் சிற்றறிவுந் சிறுதொழிலுமுடைய ஆன்மா அன்று என