பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


னோர் மீண்டும் இந்நிலவுலகிலே வந்து பிறந்துழலாதவாறு மெய்யுணர்வு நல்கிச் சிவபோகமாகிய பேரின்பத்தைத் தந்தருளியவனும் ஆகிய அம்முதல்வனைத் தன்னிற் பிரிவிலா எம் பிராட்டியாகிய அன்னையுடன் எவ்விடத்தும் எக்காலத்தும் மன்னுயிர்களை உய்வித்து வாழ்த்திருத்தல் வேண்டும் என வேண்டிக் கொள்வதன்றிச் (சொல்லின் எல்லையைக் கடந்த அம்முதல்வனை) என்சொல்லி எவ்வாறு வாழ்த்துவேன் எ-று.

உணர்ந்தார்க் குணர்வரியோனாகிய இறைவனை அடைந்தவர்கள், உரையுணர்விறந்த நிலையில் அம்முதல்வனது பேரானந்த வெள்ளத்தில் திளைத்து மகிழ்வதல்லது எண்குணத்தானாகிய அம்முதல்வனுடைய பேரருட் பண்புகளைச் சொல்லித் துதிக்கவெண்ணின் உரையின் அளவாகிய எல்லையினைக் கடந்தமையின் அவனருளிற் பிரிவறக் கூடியிருக்கும் இந்நிலையில் அஃது இயல்வதன்று என்பார் "ஏது சொல்வி வாழ்த்துவேன் இன்று'’ என்றார். “இன்று” என்றது, அம்முதல்வனது பேரருளால் அம்முதல்வனைப் பிரிவிறக்கூடி முயங்கி ஆனந்த வெள்ளத்தில் திளைத்து மகிழும் நிலையினை. "வானாகி மண்ணாகி....... கூத்தாட்டுவானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே” எனத் திருவாதவூரடிகளும், “சொல்லுவதறியேன் வாழி தோற்றிய தோற்றம் போற்றி” எனச் சேக்கிழாரடிகளும் அருளிய பொருண்மொழிகள் இங்கு ஒப்பு நோக்கி யுணரத் தக்கனவாகும்.

இந்தத் திருவுந்தியார் என்னும் சைவ சித்தாந்த உபதேசப் பனுவலை அருளிச் செய்த திருவியலுர் உய்யவந்த தேவநாயனர் இந் நூலின் பெருமையும் பயனும் தம்முடைய திருப்பெயரும் தோன்ற அருளிச் செய்தது திருவுந்தியாரின் முடிவில் உள்ள திருப்பாடலாகும்.


௪௫. வைய முழுதும் மலக்கயங் கண்டிடும்
உய்யவந் தானுரை யுந்தீபற
உண்மை யுணர்ந்தாரென் றுந்தீபற.

இது, நூலாசிரியர் பெயரும் நூலின் பெருமையும் பயனும் உணர்த்துகின்றது.

(இ-ள்) உய்யவந்த தேவநாயனாரால் அருளிச் செய்யப்பெற்ற திருவுந்தியார் என்னும் இம்மெய்ந்நூலானது, (குருமுகத்தாற் கேட்டுணரும்) உலகத்தார் அனைவர்க்கும் மும்மல நீக்கத்தைச் செய்யும். இந்நூற்பொருளைக் கற்றுணர்ந்தோர் மெய்ப்பொருளின் உண்மையினை