பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்வந்த வரன்முறை

7


(இ - ள்) (குருவின் அருளால்) எனது ஆன்மபோதங்கெட்ட அளவிலே யான் (திருவருளில்) நிலைத்து நின்று (சிவபரம்பொருளை) அறிந்த முறைமையினை, “எனதறிவு என்னும் ஆன்மபோதம் கெட்டுச் சிவஞானத்திலே வேட்கையுடையார் எல்லாரும் கேட்டுணர்வாராக’ என்று அருட்குருவாய் எழுந்தருளிய பெரியோன் ஒருவன் எனக்குச் சொன்னவண்ணம் யான் உனக்குச் சொல்ல மாணவனாகிய நீ கேட்டுணர்வாயாக” எனக் குருவாய் வந்தருளிய ஒருவன் எனது பக்குவ நிலைக்கேற்ப அதனை எனக்கு அறிவுறுத்தியருளினன். எனதன்புக்குரிய மாணவனாகிய நீ அப்பொருளை யான் உனக்குச்சொல்ல அம்முறையே கேட்டுணர்வாயாக எ - று.

என்னறிவு செல்லுதலாவது, எனது அறிவினால் நான் இதனை அறிந்தேன் என்னும் சுட்டுணர்வுகெடுதல். என்னறிவு இலார் - ஆன்ம போதம் கெட்டவர்கள். இரண்டாமடியிலுள்ள ஒருவன் என்றது, ஒப்பற்ற குருவாய் வந்தருளிய திருவியலூர் உய்யவந்த தேவ நாயனாரை. மூன்றாமடியிலுள்ள ஒருவன் என்றது, அவருடைய மாணவர் ஆளுடைய தேவநாயனாரை.

திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனாராகிய இந்நூலாசிரியர் தாம் இயற்றிய திருக்களிற்றுப்படியார் என்னும் இந்நூலால் அறிவுறுத்தப்பெறும் ஞானநூற்பொருள் குருவின் வழிமுறையில் தமக்குக் கிடைத்த வரலாற்றை விரித்துரைப்பதாக அமைந்தது இச்செய்யுளாகும். இதன்கண்,

‘என்னறிவு சென்ற அளவில் யான் நின்று அறிந்தபடி
என்னறிவு இலார் அறிக, என்று ஒருவன் - சொன்னபடி’

என்றது, திருவியலூர் உய்யவந்த தேவநாயனர் அருளிச் செய்த முதல் நூலாகிய திருவுந்தியாரையும், “சொன்னபடி சொல்லக்கேள்' என்று ஒருவன் சொன்னான்” என்றது, திருவியலூர் உய்யவந்த தேவ நாயனர்பால் மெய்யுணர்வு உபதேசம் பெற்றுத் திருக்கடவூர்க்கு எழுந்தருளிய ஆளுடைய தேவநாயனார் தம் ஆசிரியர் அருளிய திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற்பொருளைத் திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனாராகிய தமக்கு உபதேசித்தருளிய திறத்தையும் உணர்த்துவன. ‘அச்சொல் உனக்கு யான் சொல்லக் கேள்' என்றது, ‘என்னுடைய குருமுதல்வர் என்பொருட்டு அறிவுறுத்திய மெய்நூற் பொருளாகிய அதனை என் அன்புக்குரிய மாணவனாகிய உனக்கு விளங்க அறிவுறுத்தல்வேண்டி யான் வழிநூலாகச் சொல்ல, அதனைநீ கேட்டுணர்வாயாக’ எனத் தம் மாணவரை நோக்கிக் கூறும்