பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

திருவுந்தியார் — திருக்களிற்றுப்படியார்


என்றது, ஆசிரியராக எழுந்தருளிய அவர்தம் திருவடிகளைத் தலையார வணங்கி மெய்யுணர்வுபதேசம் பெற்றுத் தம் உடல்பொருள் ஆவி யனைத்தையும் அவரது உடைமையாக ஒப்படைத்தல். தம்மில் தலைப்படுதலாவது, சிவபரம்பொருள் ஆன்மாவின் கண்ணே பிரிவறப் பொருந்திப் பேரின்பம் நல்குதல். தாம் உணர்தலாவது, ஆசிரியன் அறிவுறுத்தவண்ணம் முழுமுதற்பொருளின் திறங்களைக் கற்றுக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து ஒன்றுபட்டுணர்தல். நிலைப்படுதல் - நிலையாக எழுந்தருளியிருத்தல். ஓர் இருவர் என்றது, தனக்குவமையில்லாத் தனிமுதற்பொருள் என்னும் இறைமைத்திறத்தால் ஒருவராகவும், மன்னுயிர்களை உய்வித்தல் வேண்டும் என்னும் பேரருளால் உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து நிற்றலும் அங்ஙனம் எல்லாப் பொருள்களோடும் ஒன்றாய்க் கலந்து நிற்பினும் அவற்றின் தன்மை தனக்கு எய்தலின்றி எல்லாவற்றுக்கும் அப்பாலாய்த் தனித்து நிற்றலும் ஆகிய இருதிறங்களால் முறையே சத்தியும் சிவமும் என இருவராகவும் உள்ள அம்மையப்பரை. “உடையாளுன்றன் நடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி, அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதனால்” எனவரும் திருவாசகம் ‘தம்மில் தலைப்படுவர் ஒரிருவர்’ என்பதனைப் புலப்படுத்தல் காணலாம். நீக்குதல் - உயிர்களின் பாசப் பிணிப்பினை அகற்றுதல். நிலையாக்குதல் - திருவருளின் கண்ணே நிலத்து நிற்குமாறு செய்தல். ஒர் இருவர் (பாசங்களை) நீக்கி (த்திருவருளில்) நிலையாக்கித் தாம் அத்தலை தலைப்படுவர் என இயைத்துப் பொருள்கொள்க. அத்தலை - அவ்விடம். தலைப்படுதல் தம்மியல்பு புலனாக உயிருணர்வில் வெளிப்பட்டுத் தோன்றுதல்.

இத்திருக்களிற்றுப்படியார், “தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றையவர், என்று தலைத்தமிழின் தெய்வப் புலமைத் திருவள்ளுவர் உரைத்த மெய்வைத்த சொல்லை”த்தன்னகத்தே கொண்டுள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும். .

இந்த நிலையினை அடியேனுக்கு விளங்க அருளிச்செய்தல்வேண்டும் என்ற மாணவனை நோக்கி இப்பொருளை விளக்கும் திருவுந்தியார் என்னும் மெய்ந்நூற்பொருள் தமக்குக் கிடைத்த வரலாற்றினை விரித்துரைப்பதாக அமைந்தது பின்வரும் திருக்களிற்றுப்படியார் பாடலாகும்.


3. என்னறிவு சென்றளவில் யானின் றறிந்தபடி
என்னறிவி லாரறிக என்ருெருவன் - சொன்னபடி
 சொல்லக்கேள் என்றொருவன் சொன்னான் எனக்கதனைச்
 சொல்லக்கேள் யானுனக்கச் சொல்.


இஃது இந்நூற்பொருள் வந்த வரன்முறையினை விரித்துரைக்கின்றது;