பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூல்வந்த வரன்முறை

5



அம்மையப்பராகிய இறைவர், தன்னிற் பிரிவிலா அருளாகிய சத்தியால் உலகுயிர்களோடு விரவி நின்று ஐந்தொழில் நிகழ்த்தியருளு தலாகிய பொதுவியல்பும், இங்ஙனம் உலகுயிர்களோடு பிரிவறக் கலந்து நிற்பினும் இவையெல்லாவற்றையுங் கடந்து சிந்தையாலும் அறியவொண்ணாதவாறு சிவம் எனத் தனித்து நிற்கும் தன்னுண்மையாகிய சிறப்பியல்பும் ஒருங்குணர்த்துவதாகிய இம்முதற்பாடல், பொருளியல் புரைத்தலாகிய மங்கலவாழ்த்தாமாறு கண்டுகொள்க.

‘அம்மையப்பரே யுலகுக்கம்மையப்பரென்றறிக’ எனவரும் இத் திருக்களிற்றுப்படியார் பாடற்பொருளைத் தழுவியமைந்தது,

அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய் வேறாய்
குறியது வுடைத்தாய் வேதா கமங்களின் குறியிறந்தங்
கறிவினி லருளான் மன்னி அம்மையோ டப்பனாகிச்
செறிவொழி யாது நின்ற சிவனடி சென்னிவைப்பாம்:

(சித்தியார் - சுபக். 2)

எனவருஞ் சிவஞான சித்தியார் திருவிருத்தமாகும்.


2. தம்மில் தலைப்பட்டார் பாலே தலைப்பட்டுத்
தம்மில் தலைப்படுதல் தாமுணரில் - தம்மில்
நிலைப்படுவர் ஓரிருவர் நீக்கிநிலை யாக்கித்
தலைப்படுவர் தாமத் தலை.


இது சிவனுருவையுணர்ந்து அம்முதல்வனது திருவருளிற் கூடுமாறு இதுவென வுணர்த்துகின்றது.

(இ—ள்) தம்பால் பக்குவமறிந்து எழுந்தருளிவந்த ஆசிரியரிடத் திலே தாமும் கூடி வழிபட்டு ஆன்மா சிவத்தோடு பொருந்தும் முறை யினைக் குருவின் அருளாலே தெளிந்துணரின் அந்நிலையிற் சத்தியும் சிவமுமாகிய அம்மையப்பர் இருவரும் ஆன்மாவாகிய தம்மிடத்திலே நிலைபெற்று இடங்கொள்வர். உடல் கருவி உலகு நுகர்பொரு ளாகிய பாசத்தொகுதியை நீக்கி, ஆன்மாவைத் திருவருளிலே நிலைநிறுத்திச் சிவஞானமும் அதனல் உணரப்படும் மெய்ப்பொருளுமாக அவ்விடத்தே தோன்றியருள்வர். எ - று.


தம்மில் தலைப்பட்டார் என்றது, முற்செய்தவத்தால் அருளே திருமேனியாகக் கொண்டு தம்பால் எழுந்தருளிய குருமூர்த்தியை. 'இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை' என்னும் திருவாதவூரடிகள் வாய்மொழி இங்கு நினைக்கத்தகுவதாகும். அவர்பால் தலைப்படுதல்