பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்


“தன்னை முன்னம் நினைக்கத் தருவான்” (தேவாரம்)

எனவும்,

“தன்னைத்தந்த என் ஆரமுதை” (திருவாசகம்)

எனவும்,

“தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
      சங்கரா ஆர்கொலோ சதுரர்
அந்தமொன் றில்லா ஆனந்தம் பெற்றேன்
      யாதுநீ பெற்றதொன் றென்பால்” (௸)

எனவும் வரும் திருமுறைத் தொடர்கள் இங்கு ஒப்பு நோக்கியுணரத் தக்கனவாகும்.

இத்திருவுந்தியாரின் பொருளை எடுத்துக்காட்டுத் தந்து விளக்குவது பின்வரும் திருக்களிற்றுப் படியாராகும்.



12. பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
காலனையன் றேவிக் கராங்கொண்ட-பாலன்
மரணந் தவிர்த்ததுவு மற்றவர்க்கு நந்தங்
கரணம்போ லல்லாமை காண்.

இது, தம்செயலற இறைபணி நிற்கும் செம்புலச் செல்வர்கள் நிகழ்த்தும் வியத்தகு செயல்களெல்லாம் அவர்களோடு ஒட்டிவாழும் இறைவன் செயல்களே என்பதனை எடுத்துக்காட்டுடன் விளக்குகின்றது.

(இ-ள்) சிவனுடைய அருளாலே சிவனைப்பெற்ற நாயன்மார் பாலைநிலம் நெய்தல் நிலமாகப் பாடியதும், பாம்புகடித்து இறந்தோர் பாம்பின்விடம் நீங்கி உயிர் பெற்றெழப் பாடியதும், ஊழால் வரைந்த காலம் பார்த்து உயிர்கவருந் தொழிலுடைய கூற்றுவனை இறந்த பிள்ளையைத் தரும்படி ஏவி அன்றொரு நாள் முதலையால் உண்ணப்பட்ட அந்தணச் சிறுவனது இறப்பினை நீக்கி உயிர்பெற்றெழச் செய்ததும் ஆகிய இவ்வியப்புடைய செயல்கள், அந்நாயன் மார்களுக்கு உரிய கருவிகரணங்கள் நம்மைப் போலப் பசுகரணமாக இல்லாமற் சிவகரணமாகவே இருத்தலால் நிகழ்ந்தன என்று அறிவாயாக எ-று.

பாலைநிலம் நெய்தல் நிலமாகும் வண்ணம் திருப்பதிகம் பாடியருளியவர் திருஞானசம்பந்தப் பிள்ளையார், மூவாண்டிற் சிவஞானம் பெற்ற திருஞானசம்பந்தர், தம் தந்தையார் தோளிலமர்ந்து தம் தாயார் பிறந்த பதியாகிய திருநனிபள்ளியை அணுகிய நிலையிற். பாலை நிலமாக இருந்த அத்திருத்தலத்தைக் குறித்துக் ‘காரைகள்