பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவுந்தியார் - திருக்களிற்றுப்படியார்

77


உ௪. எட்டுக் கொண்டார் தமைத் தொட்டுக்கொண்டே நின்றார்
விட்டா ருலகமென் றுந்தீபற
வீடே வீடாகுமென் றுந்தீபற.

இஃது, உள்ளங்கவர் கள்வனாகிய இறைவனது அருள்வழி நின்றவர்கள் உலகவாதனையிற்பட்டு வருந்தமாட்டார்கள் என்கின்றது.

(இ-ள்) ஐம்பூதம் ஞாயிறு திங்கள் ஆன்மா என்னும் எட்டினையுந் தனது திருமேனியாகக் கொண்டு திகழும் முதல்வனே இடைவிடாது அன்பினாற் பற்றி நிட்டை கூடியிருப்பவர்கள் உலகப்பொருள்களோடு பொருந்தி நின்றார்களாயினும் அவற்றிலுள்ள பற்றை அறவே நீத்தவர்கள். அப்பற்றுஅறவே அழிவில்லாத திருவடியே அவர்கட்குப் புகலிடமாம் எ-று.


44. தம்மிற் சிவலிங்கங் கண்டதனைத் தாம்வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர் தாமாட்டித் - தம்மையொரு
பூவாகப் பூவழியாதே கொடுத்துப் பூசித்தால்
ஓவாமை யன்றே யுளன்.

இஃது அட்டமூர்த்தியாகிய இறைவனைத் தொட்டுக்கொண்டு நிற்குமாறிது வென்கின்றது.

(இ - ள்) தம்மிடத்திலே அருளாகிய சிவலிங்கத்தைக் கண்டு அந்தச் சிவலிங்கத்தைத் தாம் பணிந்து தம்முடைய பத்தியாகிய திருமஞ்சனத்தை அபிடேகம் பண்ணித் தம்மை ஒப்பற்ற திருப்பள்ளித் தாமமாக்கித் தாம் என்கின்ற முதலழியாமற் சாத்திப் பூசித்தால் அப்பொழுதே இடைவிடாமல் உன்னுள்ளத்தே முதல்வன் விளங்கித் தோன்றுவன் எ-று.

“காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணியி லிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீரமைய ஆட்டிப்
பூசனை யீசனார்க்குப் போற்று அவிக் காட்டினோமே.” - (4-76-4)

என அப்பரடிகள் அருளிய வண்ணம் ஆவியைப் போற்றுதற்குரிய பூவாகக் கொண்டு அருச்சித்தோம் எனப் பொருள்கூறுதற்கும் இடமுண்டு.