பக்கம்:திரு. வி. க.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 8

சித்தாந்தம் தவிர்த்த ஏனைய சமயங்கள் உண்மை இல்லாதவை என்ற முடிவுக்கு வருதலும் தவறு.

பல சமயம் தோன்றக் காரணம்

ஒவ்வொரு காலத்தில் ஒவ்வோர் இடத்தில் வாழ்ந்த மக்கட்கு எவை தேவையோ அவற்றை மட்டும் அற்றை நாளில் தோன்றிய பெரியார்கள் உணர்த்திப் போயினர். வயிற்றுவலியால் அவதியுறுபவனுக்கு அதற்குரிய மருந்து தரப்படுகிறது. ஆனால், அம் மருந்து வயிற்று நோயைப் போக்குமே தவிர உடலை வளப்படுத்தும் டானிக்கன்று. அந்த மருந்திடம் டானிக் இயல்பு இல்லை என்று யாரும் குறை கூறுதல் தவறு. அதேபோல அறவாழ்க்கையை மட்டும் போதிக்க வந்தார் புத்தர் பெருமான். அவர் பின்னே வந்தவர்கள் அந்த அன்பு, அறம் என்பவற்றை விட்டுவிட்டுக் கடவுள் இல்லை, அறிவு என்னும் பொருளே இல்லை. பூதங்களே நித்தியம் என்னும் நாத்திகத்தைப் பரப்பினர். இந்த நிலையில் அறிவே பொருள் எனக் கொண்ட ஆதிசங்கரர் தோன்றி அந் நாத்திகத்தை ஒழிக்கப் பாடுபட்டார். பெளத்தர்கள் மெய் என்று கூறிய சடத்தைப் பொய் என்று நிரூபித்தார். ஆனால், சங்கரரின் பின் வந்தவர்கள் அவருடைய கருத்தைத் திரித்து சகுன வழிபாட்டை அழிக்கும் முறையில் சங்கரருடைய வாதத்தைத் திருத்திப் போதித்தனர். ஒருமை வழிபாட்டை அறிவுறுத்திய ஆதிசங்கரர், சகுன வழிபாட்டை ஒதுக்கவே இல்லை. செளந்தர்ய லகரி, சிவானந்த லகரி, தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம் என்பவற்றைப் பாடியவர் எவ்வாறு சகுண வழிபாட்டை ஒதுக்கியிருக்க முடியும்? சங்கரரின் பின் வந்தோர் சகுன வழிபாட்டை அவமதித்து ஒதுக்கியமையின், இராமாநுஜர், மத்துவர் போன்றவர்கள் தோன்றி சகுண வழிபாட்டைப் பரப்பினர். இவற்றிலிருந்து அறியப்படும் ஓர் உண்மையைத் திரு.வி.க. மிக அழகாக எடுத்துக் கூறுகிறார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/91&oldid=695613" இலிருந்து மீள்விக்கப்பட்டது