பக்கம்:திரௌபதி சூளுரை (கவிதை).pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இலக்கியம் படைப்பதில் ஒரு நிறைவு ஏற்படுகிறது. வார்த்தைகளைத் தேடி அமைப்பதில் ஒரு நயம் அமைகிறது; இது எழுத்தின் அடிப்படை நயம்பட உரை என்பது அவ்வை வாக்கு. மற்றொன்று நீதிகள் காண்பது; வாழ்க்கைக்கு அவை வழிகாட்டிகள். அவற்றை அறிய எடுத்துக்காட்டுகள் தேவை. அவற்றைத் தருவன நீண்ட இதிகாசங்கள். இவை காலம் காலமாக உரைக்கப்படுகின்றன. சில நிகழ்ச்சிகளை நியாயப்படுத்தும் பொருட்டு வலிய சில முற்பிறப்புச் செய்திகளைக் கூறினார்கள். அக்காலத்தில் முற்பிறப்பில் நம்பிக்கை இருந்தது. பிறவி உண்டு என்பது இந்த நாட்டு மக்களின் நம்பிக்கை; எனவே முற்பிறவியின் நிகழ்ச்சிகளைக் கூறும்போது சமாதானம் அடைய முடிகிறது. மற்றும் சில கதைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அதீத செயல்கள் கூறப்படுகின்றன. அவற்றை மக்கள் விரும்பினர். 'கடவுள்' என்றால் அவர் அசாதாரண நிகழ்ச்சிகளைச் செய்து தர வேண்டும் என்று எதிர்பார்த்தனர். இன்று காலம் மாறி விட்டது; உள்ளதை உள்ளபடி கூறாவிட்டால் இலக்கியம் அதன் நம்பகத்தன்மை இழந்து விடுகிறது. நியாயப்படுத்த வேண்டிய தேவை இன்று இல்லை.