பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

யும், வித்தியாநுபான யந்திரசாலையையும் நிறுவிச் சைவமும் தமிழும் வளரப் பெரும்பணி புரிந்துள்ளார்; திருக்குறள், தொல்காப்பியம் முதலிய தமிழ்த்தொன்னூல்களையும், பெரிய புராணம், கந்தபுராணம் திருவிளையாடற் புராணம் முதலிய சைவ இலக்கிய நூல்களையும், நன்னூல், நிகண்டு முதலிய கருவி நூல்களையும் பிழையற்ற நிலையில் பதிப்பித்து வழங்கியவர் இலரே. தமிழ் மாணவர்களது கல்வி வளர்ச்சியின் பொருட்டு ஒன்று முதல் நான்கு வரையுள்ள பாலபாடங்களையும், சமய ஒழுக்கத்தின் பொருட்டுச் சைவ வினாவிடை முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். தமிழ் வளர்ச்சியின் பொருட்டு இவர்கள் நிறுவிய கல்வி நிலையம் சிதம்பரத்தின் மேலைவீதியில் இவர்தம் புகழுருவாகத்திகழ்கின்றது.

சிதம்பரம் இராமலிங்க வள்ளலார். தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள மருதூரில் கருணீகர் மரபில் இராமையா பிள்ளைக்கும் சின்னம்மைக்கும் புதல்வராகத்தோன்றிய இவர், முருகப்பெருமானையே குருவாகக் கொண்டு மெய்ந் நூல்கள் பலவற்றையும் ஓதாது உணர்ந்தவர்; தில்லைப்பெருமான்பால் அளவிலாப் பேரன்பு பூண்டு, சிதம்பரத்தில் தங்கி நடராசப் பெருமானை ' நாள் தோறும் வழிபட்டமையால் சிதம்பரம் இராமலிங்கம் என அழைக்கப்பெற்றார். சிதம்பரம் இராமலிங்கம் எனக் கையொப்பமிடுதலை வழக்கமாகக் கொண்டுள்ளதால் தில்லைப்பெருமான்பால் இவர் கொண்டிருந்த பேரார்வம் நன்குபுலனாகும். தில்லைத் திருக்கூத்துத் தரிசனமாகிய சோதி வழிபாட்டினைச் சாதி சமய வேறுபாடின்றி எல்லா மக்களும் கண்டு உய்தி பெறும் நிலையில் பார்வதிபுரம் என வழங்கும் வடலூரில் சத்திய ஞான சபையையும், சமரச சுத்த சன்மார்க்சு சங்கத்தையும் சத்திய தருமச் சாலையையும் நிறுவி ஒன்றே குலம் ஒருவனே தேவன் எனும் திருமூலர் நெறியை வளர்த்த பெருமை வடலூர் இராமலிங்க வள்ளலார்க்குரிய தனிச்சிறப்பாகும். 'கேழில் பரஞ் சோதி கேழில் பரங்கருணை' என மணிவாசகப் பெருமான் அருளிய திருவெம்பாவைத் தொடரை உளங் கொண்ட இராமலிங்கர், 'அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி' என்னும்