பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

சமரச சுத்த சன்மார்க்க வழிபாட்டு மந்திரத்தை உருவாக்கியுள்ளமை தில்லைக்கூத்தப்பெருமானையே தம் வழிபடுகடவுளாகக் கொண்டுள்ளார் என்பதனை நன்கு புலப்படுத்தும்.

பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்:

சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் திரு விராமேச்சுரத்தில் பிறந்து பாம்பன் என்னும் பதியில் பலநாள் வாழ்ந்தவர்; பிரப்பின் வலசை யென்னும் ஊரில் முப்பத்தைந்து நாள் சிவயோக நிட்டையிலிருந்து முருகனது திருவருட்காட்சியினைக் காணப் பெற்றவர்; திருவலங்கற்றிரட்டு, திருப்பாமுதலிய செய்யுள் நூல்களையும் சைவசமய சரபம், தகராலய ரகசியம் முதலிய தத்துவ நால்களையும் இயற்றிச் சைவமும் தமிழும் வளர்த்த செந்தமிழ்த் தவமுனிவர். தமிழ் வடமொழி என்னும் இருமொழிப் புலமையும் நிரம்பப்பெற்ற இவர் சிதம்பரத்தையடுத்த சிற்றூரில் தங்கியிருந்து கூத்தப்பெருமானை வழிபட்டுப் புறச்சமய இருள் நீக்கிச் சிவநெறிபரப்பிய அருளாளர் ஆவர். இவர் இயற்றிய தகராலயரகசியம் என்னும் நூல், சிற்பர வியோமமாகிய தில்லைச் சிற்றம்பலத்தினைக் குறித்தும் சிதாகாசப் பெருவெளியாகிய அதன்கண் ஆடல் புரிந்தருளும் முழுமுதற்கடவுளாகிய நடராசப் பெருமானைக் குறித்தும் வடமொழி வேத உபநிடதங்களிலும் செந்தமிழ்மாமறையாகிய திருமுறைகளிலும் கூறப்படும் தத்துவவுண்மைகளை எடுத்துக்காட்டி விளக்கும் சிறப்புடையதாகும்.