பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

7. தில்லைத் திருப்பணி

1. சோழர்

திருவானைக்காவில் தன் வாயின் நூலால் திருநிழற்பந்தர் செய்து வழிபட்ட சிலந்தியினைச் சிவபெருமான், சோழர் குலத்திற் கோச்செங்கணானாகப் பிறப்பித்தருளினார் என்பது வரலாறு. இதனைத் தேவார ஆசிரியர்கள் மூவரும் தம்பாடல்களிற் குறித்துப் போற்றியுள்ளார்கள். சங்ககாலச் சோழமன்னர்களுள் ஒருவராகிய கோச்செங்கண் சோழர் சோழ நாட்டில் அகநாடுகள் தோறும் சிவபெருமான் அமர்ந்தருளும் அழகிய மாடக்கோயில்களை அமைத்து அக்கோயில்களில் நாடோறும் நிகழும் பூசனைக்கு வேண்டிய அமுது படி முதலான படித்தரங்களுக்குப் பெரும்பொருள் வகுத்தார். சோழர் குலத் தோன்றலாகிய இவர் தமக்குரிய சோழநாட்டுடன் பாண்டியர்க்குரிய தென் புலமாகிய நாட்டினையும் தன்னகப்படுத்திப் பாண்டியர்க்குரிய அடையாள மாலையாகிய வேப்பமலர் மாலையினையும் சூடி ஆட்சி புரிந்தார் என்பது,

"தென்னவனாயுல காண்ட செங்கணாற் கடியேன்”

(திருத்தொண்டத்தொகை 11)

எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும்,

“நிம்பாறுங் தொங்கல் கோச்செங்கணான்”

(திருத்தொண்டர் திருவந்தாதி 82)

என நம்பியாண்டார் நம்பிகளும் இவ்வேந்தர் பெருமானைப் போற்றியுள்ளமையாற் புலனாகும்.

பெருவேந்தரும் சிறந்த சிவனடியாருமாகத் திகழ்ந்த கோச் செங்கட்சோழ நாயனார் எல்லாம் வல்ல சிவபெருமான் ஐந் தொழில் திருக்கூத்தியற்றியருளும் தில்லைப் பதியையடைந்து பொன்னம்பலவன் திருவடிகளை வணங்கித் தில்லையில் தங்கியிருந்து அகத் தொண்டுகள் பல புரிந்து அப்பெருமானைப் பூசனை புரியும் தில்லை வாழந்தணர்கள் தங்குதற்குரிய திருமாளி