பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145



9. தில்லைக்கோயிலின் நிர்வாகம்

தில்லைப் பெருங்கோயிலின் நிர்வாகமனைத்தும் நாடாளும் மன்னனது நேரடிப்பார்வையில் நிகழ்ந்தமையால் இத்தலம், கல்வெட்டுக்களில் தனியூர் பெரும்பற்றப்புலியூர் என வழங்கப் பெறுவதாயிற்று. (தெ. இ. க. தொகுதி IV எண் 226) அரசனுடைய அதிகாரி ஒருவரோ இருவரோ இத்திருக்கோயிலின் நடைமுறையை, தில்லையில் தங்கிக் கவனித்து வருவார். கோயில் பணிகளைப் புரிந்து வரும் பல்வேறு குழுவினரும் மூலப்பருஷையாரும் நகரமக்களும் இவ்வதிகாரிகளுடன் கலந்து கோயிலுக்குரிய நிலமுதலிய உடைமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பினை மேற்கொள்வர். இச்செய்தி, "தொண்டைமானும் திருவை யாறுடையானும் மதுராந்தகப் பிரமராயனும் ஆளுடையார் கோயிலுக்குச் சமுதாயத் திருமாளிகைக் கூறு தில்லையம்பலப் பல்லவராயனும் சீகாரியஞ் செய்வார்களும் சமுதாயஞ் செய்வார்களும் கோயில் நாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக் கூறு செய்ய திருவாய் மொழிந்தருளின படி" (தெ.இ. க, தொ. IV எண் 222.) என வரும் அரசு ஆணையால் நன்குபுலனாகும். முதற் கோப்பெருஞ்சிங்கன் ஆட்சியில் தில்லைப்பெருங்கோயில் அவனது நேர்ப்பார்வையில் நிர்வாகஞ் செய்யப்பெற்றதாகத் தெரிகின்றது.

இரண்டாம் கோப்பெருஞ் சிங்கன் காலத்தில் உடையார் திருச்சிற்றம்பல முடையார் கோயிலை "ஸ்ரீ மாகேசுவரக் கண்காணி செய்வார்களும் ஸ்ரீகாரியம் செய்வார்களும் கோயில் நாயகஞ் செய்வார்களும் திருமாளிகைக் கூறு செய்வார்களும் கணக்கரும்" (தெ. இ. க, தொ. XII எண் 148) அரசனது ஆணைப்படி கண்காணித்து வந்தனர் எனத் தெரிகின்றது. இக்கோயிலின் நில முதலியன பற்றிய சான்றுகள் பெரும்பற்றப் புலியூர் மூலபருஷையார் கையெழுத்துடன் திருக்கையொட்டிப் பண்டாரத்தில் ஒடுக்கப் பெற்றிருந்தன. தில்லைப்பெருங் கோயிலில் வரையப்பெற்றுப் படியெடுக்கப் பெற்றுள்ள இருநூற்றெழுபது கல்வெட்டுக்களில் இக்கோயிலின் நிர்வாகம் நாடாள் வேந்தனின் ஆணைப்படி திருக்கோயிலில் பணிசெய்யும் பல்வேறு குழுவினராலும் சமுதாயஞ் செய்வாராகிய நகர