பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

பலமுடையராகிய பொன்னம்பலவாணர்க்குச் சிறப்புரிமை யுடைய திருக்கோயிலாகக் குறிக்கப்பெற்றுள்ளமை காணலாம்.

இவ்வாறு சைவ சமயத்தார்க்கே சிறப்புரிமை வாய்ந்த சிதம்பரம் நடராசப் பெருமான் திருக்கோயிலில் கோவிந்தராசப் பெருமாள் திருவுருவம் எப்பொழுது பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பதும் இக்கோயிலில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு எத்தகைய உரிமையுண்டு என்பதும் வரலாற்று முறையில் நோக்குவது இக்கோவிலின் அமைதியான நடைமுறைக்கு மிகவும் உறுதுணை செய்வதாகும்.

தேவார ஆசிரியர் மூவர் காலம் வரையிலும் தில்லைப்பெருங் கோயிலில் கோவிந்தராசப்பெருமாள் சந்நிதி இடம்பெற வில்லை. சிதம்பரம் சபாநாயகர் திருக்கோயிலில் கோவிந்த ராசப்பெருமாளை முதன் முதற் பிரதிஷ்டை செய்தவன் கி.பி. 726 முதல் 775 வரை ஆட்சிபுரிந்த நந்திவர்மபல்லவன் ஆவன், இச்செய்தி திருச்சித்திரகூடத்தைப் போற்றித் திருமங்கை யாழ்வார் பாடியருளிய பெரிய திருமொழியாற் புலனாகின்றது.

“பைம் பொன்னும் முத்தும் மணியுங் கொணர்ந்து
படைமன்னவன் பல்லவர்கோன் பணிந்த
செம்பொன் மணிமாடங்கள் சூழ்ந்த தில்லைத்
திருச் சித்திர கூடம் சென்று சேர்மின்களே"

(பெரிய திருமொழி 3-2-3)

எனத் திருமங்கையாழ்வார் பாடிப் போற்றுதலால் தில்லைப் பெருங்கோயிலிலுள்ள கோவிந்தராசப்பெருமாள் சந்நிதி நந்தி வர்ம பல்லவனால் முதன் முதல் அமைக்கப்பெற்றதென்பது நன்கு புலனாகும். இச்சந்நிதி தில்லைக் கூத்தப்பிரான் திருமுற்றத்தில் சிறிய திண்ணையளவில்தான் முதன் முதல் நிறுவப்பெற்றிருந்தது என்பது தில்லைத் திருச்சித்திரகூடம் என்ற பெயரால் தெளியப்படும். 'சித்திரகூடம் தெற்றியம்பலம்' என்பது திவாகரம். தெற்றி -- திண்ணை, எனவே திண்ணையளவிலமைந்த சிறிய இடத்திலேயே நந்திவர்மபல்லவன் கோவிந்தராசப்பெருமாளைப் பிரதிஷ்டை செய்தான் என்று தெரிகின்றது.