பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83

கோவையில் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார். இவ்வேந்தர் பெருமான் திருநீற்றிற் கொண்ட பேரன்பின் திறத்தால் பகைவர் இவன்மேலெய்த அம்புகளெல்லாம் இவன் பாதங்களில் பணிந்து விழ, தில்லையம்பலப்பெருமான் திருவடிகளைத் தன் முடிக்கணிந்து போரில் வெற்றிபெற்றான். இதனை

“பொடியேர் தருமே னியனாகிப் பூசல் புகவடிக்கே
கடிசேர் கணைகுளிப் பக்கண்டு கோயிற் கருவியில்லா
அடியே படவமை யுங்கணை யென்ற வரகுணன்றன்
முடியே தருகழ லம்பத் தாடிதன் மொய் கழலே.”

எனவரும் கோயிற்றிருப்பண்ணிய்ர் விருத்தத்தில், நம்பியாண் டார் நம்பிகள் எடுத்துரைத்துப் போற்றியுள்ளார்.

திருவதிகை மனவாசகங்கடந்தார்.

இவர் மெய்கண்டதேவர் மாணாக்கருள் ஒருவர். தில்லைப் பெருமானை இடைவிடாது சிந்தித்து அம்முதல்வனது ஐந்தொழில் திருக்கூத்தின் இயல்பினைத்தம் ஆசிரியர் மெய்கண்ட தேவர்பாற் கேட்டுணர்ந்தவர். தாம் இயற்றிய உண்மை விளக்கம் என்னும் சைவ சித்தாந்த சாத்திரத்தில் எல்லாம் வல்ல தில்லை யம்பலவாணன் திருவைந் தெழுத்தாகிய மந்திரவுருவில் நின்று மன்னுயிர்கள் உய்தி பெறுதல் வேண்டி ஐந்தொழில் திருக்கூத்து இயற்றியருளும் திறத்தினை உண்மைவிளக்கம் 30 முதல் 38 வரையுள்ள செய்யுட்களில் விரிவாக விளக்கியுள்ளார். இறைவன் செய்யும் ஐந்தொழில்களில் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களும் உலகமாகிய அண்டத்தில் நிகழ்வன. மறைத்தல், அருளல் என்னும் இரண்டும் பிண்டத்தில் வாழும் உயிர்களின் இதயத்திலே நிகழ்வன, உடுக்கையேந்திய கையினாலே மாயையென்னும் பாசத்தை உதறித்தள்ளுதலும், தீயேந்தியகையினாலே வல்வினையைச் சுட்டெரித்தலும், ஊன்றிய திருவடியினலே ஆணவமலத்தின் வலிகெட அதனை அமுக்குதலும், தூக்கிய திருவடியினாலே அருளே தநுவாக ஆன்மாக்களை எடுத்து நிறுத்துதலும் அமைத்த திருக்கையினாலே ஆருயிர்களை ஆனந்த வெள்ளத்துள் அழுந்தித்திளைக்கச் செய்தலும் இறைவனது திருக்கூத்தின முறைமையாதலை,