உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அணிந்துரை

காட்டுகின்றார். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், இத்தலம் தொடர்பான உலா, மாலை போன்ற சிற்றிலக்கியங்கள் ஆகியன இத்தலம் பற்றிக் குறிப்பன வற்றை விளக்கியுள்ளார். ஒவ்வொருவரும் குறைந்தது தாம் வாழும் ஊரினது வரலாற்றையாவது அறிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதலை ஸ்ரீ திருப்புறம்பயத்தல வரலாறு ஏற்படுத்துகிறது.

மிகத்தொன்மையானதும் வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான காவிரிப்பூம்பட்டினம் பற்றிய நூலுள் இது சோழர்தம் பழைய தலைநகரங்களுள் ஒன்றாக விளங்கியமையைக் குறிப்பிடுவதோடு சிலப்பதிகாரம் போன்ற பழைய இலக்கியங்கள் சுட்டும் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இம்மாநகரை மீட்டுருவாக்கம் செய்ய முயன்றுள்ளார்.

கண்டராதித்த சோழரின் இரண்டாம் மனைவி செம்பியன்மாதேவி. வாழ்நாள் முழுவதும் இறைப் பணிகள் பல செய்த பெருமையுடையவர். சோழமன்னர் அறுவர் காலத்திலும் வாழ்ந்த பெருமூதாட்டி. மாதேவடிகள் எனப் போற்றப்படுபவர். பழைய செங்கற்கோயில்கள் பலவற்றைக் கற்றளிகளாக்கியவர். இத்தகு சிறப்புக் கொண்ட இவ்வம்மையாரின் பெயரிலமைந்த ஊரில் விளங்கும் திருக்கோவிலின் வரலாற்றை விளக்குவது செம்பியன்மாதேவித் தல வரலாறு. மறைந்த கம்பனடிப்பொடி காரைக்குடி சா.கணேசன் அவர்களின் விமர்சனப் பாங்கோடு கூடிய முன்னுரையுடன் கூடியது இச்சிறு நூல். கோயிலின் பெருமை, வருவாய், நிருவாகம், கோயிலில் காணப்படும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகள் எனத் திறம்பட அமைந்துள்ளது. நூலின் இறுதியில் பிற்சேர்க்கைகள், விளக்கக் குறிப்புக்கள் என்பவற்றோடு ஆங்காங்கே நல்ல புகைப்படங்களும் இணைக்கப்பட்டு ஆய்வுப் பொலிவோடு விளங்குகின்றது.

xiii