உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காவிரிப் பூம்பட்டினம்

141

வேண்டும் என்ற பெரு வேட்கையால் வேண்டினானெனவும், அவன் விருப்பத்தை நிறைவேற்றும் முறையில் குடமலை யிலுள்ள அகத்திய முனிவர், தம் கையிலுள்ள கமண்டல நீரைக் கவிழ்த்தமையால், நேர் கிழக்கே ஓடிவந்த காவிரியாறு, இந்நகரத்தின் அருகேயுள்ள கடலொடு பொருந்தித் தோன்றிய தெனவும், அந்நிலையில் இம்மூதூரில் தவஞ் செய்திருந்த சம்பாபதியாகிய தெய்வம், காவிரியை மகிழ்ச்சியுடன் வரவேற்றுத் தன் மடிமீது அமர்த்திக் கொண்டு, "படைப்புக் காலத்தே சம்பாபதி என என் பெயரால் அமைந்த இம்மூதுரை நின் பெயரால் வழங்கச் செய்தேன் நீ நீடுவாழ்க” எனக் காவிரியை வாழ்த்தியதெனவும் மணிமேகலைப் பதிகம் கூறும். இக்குறிப்பினை நோக்குங்கால் காவிரியாறு இந்நகரத்தின் நடுவே சென்று கடலொடு கலப்ப தென்பதும் அதன் தெற்கும் வடக்கும் ஆக அமைந்த நிலப்பகுதியே காவிரிப்பூம்பட்டினம் என முற்காலத்தில் வழங்கப்பெற்ற தென்பதும் நன்கு புலனாதல் காணலாம்.

புகாரின் நிலப்பரப்பு

சங்க காலத்தில் சோழ நாட்டின் உள் நாடாகிய புகார் நாடு என்ற நாட்டிற்குத் தலையூராக விளங்கியது காவிரிப்பூம் பட்டினம். இவ்வூர் 1800 ஆண்டுகளுக்கு முன் நான்கு காவதம் (சுமார் முப்பது மைல்) பரப்புடைய பேரூராய் விளங்கிய தெனச் சிலப்பதிகாரம் கூறும். இப்பொழுது கருவேந்தநாதபுரம், கடாரங்கொண்டான் என வழங்கும் ஊர்கள் இந்நகரத்தின் மேற்புறவெல்லையாகவும், திருக்கடவூர் தெற்கெல்லையாகவும்

கலிக்காமூர் (அன்னப்பன்பேட்டை) வடக்கெல்லை யாகவும் கடல் கிழக்கெல்லையாகவும் அமைய, இந்நாற்பேரெல்லைக்குட் பட்ட சிற்றூர்கள் அனைத்தையும் தன் அங்கமாகக் கொண்ட நிலப்பகுதியே முற்காலத்தில் காவிரிப்பூம்பட்டினமென ஒரு பெருநகராக விளங்கியது.

புகார்நகரத்துக் குடிகள்

இப்பெருநகரத்தில் முற்காலத்தில் அறுபதினாயிரங் குடிகள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார்கள் எனத் தெரிகிறது. சிலப்பதிகார ஏடொன்றில் மனையறம் படுத்தகாதைத்