உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

191

அணிந்துரை

(காரைக்குடி சா. கணேசன்)

இராசகேசரி கண்டராதித்தன் என்பவன் சோழப் பேரரசரில் ஒருவன்.கி.பி. 953 முதல் 957 வரை சோழ மண்டலத்தை ஆண்டவன். கண்டராதித்த தேவர் என்றும், மும்முடிச் சோழ தேவர் என்றும் மக்கள் மிகுந்த அன்புடன் இவனை அழைப்பர். செந்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் உடையவன். தில்லைக் கூத்தன்பால் எல்லையிலாப் பக்தி பூண்டவன். சைவத் திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில், திரு விசைப்பாவில் உள்ள 'கோயிற் பதிகம்' இவன் பாடியதாகும். தில்லைப் பெருமானிடம் இவனுக்குள்ள ஆராத காதலையும், அம்பலத்தாடி தன் அடிமலரைக் கூட வேண்டும் என்னும் தீராத ஏக்கத்தையும் அப் பதிகத்தை மேற்போக்காகப் பார்ப்பவர்களும் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

கண்டராதித்தனுக்கு இரு மனைவிமார்கள். முதல் மனைவி வீரநாரணி என்னும் பெயரினள். இளையவள் பெயர் செம்பியன் மாதேவி. கண்டர் ஆதித்தன் பட்டத்திற்கு வருமுன்னரே வீரநாரணி இறந்துவிட்டாள். எனவே செம்பியன் மாதேவி தான் பட்டத்து அரசியாக வீற்றிருந்திருக்கிறாள். கண்டர் ஆதித்தன் சுமார் நான்கு ஆண்டுகளே அரியணையில் இருந்திருக்கிறான். அவன் காலமான பின்னர் சுமார் 45 ஆண்டுகள் செம்பியன் மாதேவி உயிர் வாழ்ந்திருக்கிறாள். தன் வாழ்நாள் எல்லாம் சிவனடி மறவாச் சிந்தையளாய், தெய்வத் திருப்பணியே செய்து சோழர் வரலாற்று ஏட்டிலே ஒப்பு உரைக்க ஒண்ணாதபடி நிலை பெற்று விளங்குகிறாள். சிவப் பணிக்கே தன்னை அற்பணித்துக் கொண்டு பெரு வாழ்வு வாழ்ந்தமையால் இவள் மாதேவடிகள் என்று பாராட்டப் பெற்றிருக்கிறாள்.