உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




192

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

தன் மாமனார் முதற் பராந்தக சோழன் 1, அவன் பின் தன் கணவன் கண்டர் ஆதித்த சோழன் 2, அவன் பின் தன் கொழுந்தன் அரிஞ்சய சோழன் 3, அவன் பின் மேற்படி கொழுந்தன் மகன் இரண்டாம் பராந்தகன் ஆகிய சுந்தர சோழன் 4, அவன் பின் தன் அருமை மகன் மதுராந்தகன் ஆன உத்தம சோழன் 5, அவன் பின் தன் கொழுந்தன் பேரன் அருள் மொழி வர்மன் ஆன இராசராச சோழன் 6, ஆகிய ஆறு பேர் ஆட்சியையும் கண்டு களித்த பெரு மூதாட்டியார் செம்பியன் மாதேவியார். அறுபது ஆண்டுகள் சிவப்பணி செய்திருக்கிறாள். கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகளாவது நில வுலகில் வாழ்ந் திருக்க வேண்டும். அந்தக் காலம் கி.பி. 920-1001 என்று துணியலாம்.

பண்டைச் சோழர் பணிகளான செங்கற் கோயில்கள் பலவற்றைக் கற்றளியாக எடுப்பித்தும், நித்திய நைமித்தியங் களுக்கு நிவந்தங்கள் ஏற்படுத்தியும், இறை திருவுருவங்களுக்கு அணி கலன்கள் அளித்தும், திருவுண்ணாழியில் நந்தா விளக்கு எரிய முதல் ஈய்ந்தும், நந்தவனம் ஏற்படுத்தியும் பல்லாற்றானும் சிவத்தொண்டு புரிந்திருக்கிறாள். செம்பியன் மாதேவியார் கற்றளியாக எடுப்பித்த கோயில்கள் பலவற்றுள் 1. திருநல்லம், 2. தென் குரங்காடுதுறை, 3. திருவக்கரை, 4. திருகோடிக்கா, 5. திருத்துருத்தி, 6. திருமுதுகுன்றம், 7. திருவாரூர் அரநெறி, 8. திருமணஞ்சேரி, 9. செம்பியன் மாதேவி ஆகிய ஒன்பதைப் பற்றி உறுதியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இவற்றுள் திருநல்லம் என்னும் கோனேரி ராசபுரத்தில் செங்கலாற் கட்டப் பெற்றிருந்த கோயிலைக் கற்றளியாக எடுப்பித்து, அக்கோயிலில் கண்டர் ஆதித்தன் சிவலிங்கத்திற்குப் பூசை செய்வது போல ஒரு ஓவியம் சமைப்பித்துள்ளாள். அந்தத் திருக்கோயிலுக்குத் தன் கணவன் பெயரான ஸ்ரீ கண்டராதித்தர் என்ற பெயரையே சூட்டி மன நிறைவு கொண்டிருக்கிறாள். அச்சிற்பத்தின் அடியில் காணப்பெறும் கல்வெட்டைப் படித்துப் பார்த்தால் செம்பியன் மாதேவிக்கு உள்ள சிவ பக்தியின் ஊற்றமும், பதிபக்தியின் ஏற்றமும் தெள்ளிதிற் புலனாகும். அது வருமாறு-