உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செம்பியன் மாதேவித் தல வரலாறு

211

பராந்தக சோழர் ஆட்சியில் கி.பி. 941-ஆம் ஆண்டில் திருச் சிராப்பள்ளிக்கு அண்மையிலுள்ள உய்யக் கொண்டான் மலையில் திருக்கற்குடி மாதேவர்க்கு ஒரு நுந்தாவிளக்கு எரிப்பதற்குத் தொண்ணுறு ஆடுகள் அளித்தமையேயாகும். இவர்கள் தம் பேரனார் முதல் இராசராச சோழர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1001-ல் தென்னார்க்காடு ஜில்லா, விழுப்புரம் தாலுகாவிலுள்ள திருவக்கரைக் கோயிலைக் கருங்கற்கோயிலாக அமைத் தமையே தம் வாழ்நாளில் இறுதியில் செய்த திருப்பணி என்று தெரிகிறது. அவ்வாண்டிற்குப் பிறகு இவர்கள் புரிந்த அறங்கள் எங்கும் காணப்படவில்லை. எனவே, அவ்வாண்டில் தான் இவர்கள் சிவபெருமான் திருவடியை எய்தியிருத்தல் வேண்டும். ஆகவே, இவர்கள் சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகள் திருக்கோயில் களுக்குத் திருப்பணிகளும் பல்வகை அறங்களும் செய்து சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டு புரிந்துள்ளனர் என்று கூறலாம். எனவே, இவர்கள் எண்பத்தைந்து ஆண்டுகள் வரையில் இருந்தவர் களாதல் வேண்டும்.

இவர்கள் காலத்தில் சோழ இராச்சியத்தில் சக்கர வர்த்தி களாக வீற்றிருந்து அரசாண்ட சோழ மன்னர்கள் அறுவர்; அவர்கள் முதற் பராந்தக சோழர், முதற்கண்ட ராதித்த சோழர், அரிஞ்சயசோழர், சுந்தரசோழர், உத்தம சோழர், முதல் இராசராச சோழர் என்போர். அப்பெரு வேந்தர்கள் இவ்வரசியார் புரிந்த அறச் செயல்களுக்கு உளம் உவந்து துணை நின்றமை குறிப்பிடத் தக்கது.

இதுகாறும் ஆராய்ந்து கண்ட அளவில், இவ்வரசியார் நம் தமிழகத்தில் பத்துச் செங்கற் கோயில்களைக் கருங்கற்கோயில் களாகக் கட்டியுள்ளனர் என்று தெரிகிறது. அவை, திருநல்லம், செம்பியன்மாதேவி, விருத்தாசலம், திருவாரூர் அரநெறி, திருமணஞ்சேரி, தென்குரங்காடு துறை (ஆடுதுறை புகைவண்டி நிலைய முள்ள ஊர்) திருக்கோடிகா, ஆநாங்கூர், திருத்துருத்தி (குற்றாலம் புகைவண்டி நிலையமுள்ள ஊர்), திருவக்கரை என்ற ஊர்களிலுள்ள சிவாலயங்களே யாகும். அன்றியும், பல கோயில்களுக்கு நாள் வழிபாட்டிற்கும், திரு விழாக்களுக்கும், மூவர் திருப்பதிகங்கள் பாடுவோர்க்கும் நுந்தா விளக்கு