உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 1.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




212

தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் - 1

களுக்கும், நந்தவனங்களுக்கும் பல பல நிவந்தங்கள் அளித்துள்ளனர்; பல கோயில்களுக்கு விலை உயர்ந்த அணிகலன்களோடு பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட பல்வகைக் கலங்களும் வழங்கி யுள்ளனர். இவ்வாறு இவர்கள் செய்துள்ள அறங்கள் மிகப் பலவாகும்.

இவ்வரசியார் புரிந்த தொண்டுகளுள் முதலில் வைத்துப் பாராட்டற்குரியது தஞ்சாவூர் ஜில்லாவில் கோனேரி ராசபுரம் என்று இந்நாளில் வழங்கும் திருநல்லம் என்ற ஊரிலுள்ள திருக்கோயிலைக் கருங்கற்கோயிலாகக் கட்டி, அதற்குநாள் வழிபாடு, திருவிழா முதலானவற்றிற்கு நிவந்தமாக இறையிலி நிலங்கள் அளித்திருப்பதேயாம். அக்கோயிலைத்தம் ஒப்புயர்வற்ற கணவனார் கண்டராதித்த சோழர் பெயரால் அமைத்து, அதில் அவ்வரசர் பெருமான் சிவலிங்க வழிபாடு செய்வதாகத் திருவுருவம் ஒன்று வைத்திருப்பது உணரற்பாலது. இவ்வரசியாரின் ஆணையின்படி அக்கோயிலை அமைத்தவன் அரசியல் அதிகாரிகளுள் ஒருவனாகிய ஆலத்தூருடையான் சாத்தன் குணபத்தன் அரசரண சேகரன் என்பவன். அவனது தாண்டினைப் பாராட்டி அரசாங்கத்தார் அவனுக்கு இராசகேசரி மூவேந்தவேளான் என்ற பட்டம் வழங்கியிருத்தல் அறியத்தக்கது.

இவ்வம்மையார் தமக்குப் பணி செய்யும் பணி மகள் 'இலச்சியன் மழபாடி 'யின் நலங்கருதித் திருவெண் காட்டுச் சபையாரிடம் 125 கழஞ்சு பொன்னுக்கு நிலம். வாங்கி அவ்வூர்க் கோயிலில் அந்தணர்க்கு அமுதளித்தலாகிய அறத்தினைச் செய்திருப்பது, எளியோர்பால் இவர்கள் கொண்ட பேரன்பினைப் புலப்படுத்துவதாகும்.

முதல் இராசராச சோழருடைய புதல்வரும் பேரரசரும் ஆகிய முதல் இராசேந்திர சோழர் என்ற கங்கை கொண்ட சோழர் செம்பியன்மாதேவியிலுள்ள திருக்கயிலாச முடையார் கோயிலில் கி.பி. 1019-ஆம் ஆண்டில் இவ்வரசியாரின் திருவுருவத்தை எழுந்தருளுவித்து வழிபாட்டிற்கு நிவந்தம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்க அரிய நிகழ்ச்சியாகும்.