பாண்டியர் வரலாறு
135
4. அரசிறை
அக்காலத்தில் குடிகள் தம் அரசர்க்கு நிலவரி செலுத்தி வந்தனர். இந்நிலவரி விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவாதல் பொன்னுங் காசுமாகவாதல் செலுத்தப்பட்டு வந்தது. இதனை ஊர்ச்சபையார் குடிகளிடத்திலிருந்து ஆண்டுதோறும் வாங்கி அரசனது தலைநகரிலுள்ள அரசாங்கப் பொருள் நிலையத்திற்கு அனுப்பிவந்தனர்.
இனி, நிலவரியேயன்றித் தறியிறை, செக்கிறை தட்டார்ப் பாட்டம், இடைவரி, சான்றுவரி, பாடிகாவல், மனையிறை, உல்கு முதலான வரிகளும் இருந்துள்ளன. ஒவ்வொரு தொழிலின் பெயரையுஞ் சுட்டி வரிப்பெயர் குறிக்கப்பட்டிருத்தலின் வரிப் பெயர்கள் மிகுந்து காணப்படுகின்றனவேயன்றி வேறில்லை. இந்நாளில் தொழில்வரி என்ற பொதுப்பெயரால் எல்லாத் தொழிலாள ரிடத்தும் வரி வாங்கப்படுகிறது. எனவே, இற்றை நாளிலுள்ள தொழில்வரி ஒன்றே, எல்லாத் தொழில்களின் மேலும் விதிக்கப் பட்டுள்ள வரிகளைத் தன்னகத்து அடக்கிக்கொண்டு நிற்றல் அறியதக்கது.
இறை, பாட்டம் என்பன வரியை யுணர்த்தும் மொழிகள். தட்டார்பாட்டம் என்பது கம்மாளர்கள் செலுத்திவந்த வரியாம். பாடிகாவல் என்ற வரி நாடு காவல் எனவும் வழங்கப் பட்டுள்ளது. இஃது ஊர்களைக் காத்தற்கு வாங்கிய வரியாகும். மனையிறை, குடியிருப்பு மனைக்கு வாங்கியதோர் வரி என்க. உல்கு என்பது சுங்க வரியாகும். கலத்தினும் காலினும் வரும் பண்டங்கட்கு வாங்கப் பெற்ற வரி சுங்க வரியாகும்.
5. நில அளவு
ஒவ்வொரு நாட்டிலுமுள்ள ஊர்களை முறையாக அளந்தாலன்றி அங்கு விளைநிலங்கள் எவ்வளவு உள்ளன வென்பதும், குடிகளிடத்திலிருந்து அரசாங்கத்திற்கு நிலவரி எவ்வளவு வரவேண்டும் என்பதும் நன்கு புலப்படமாட்டா. ஆதலால், பாண்டி மண்டலம் முழுமையும் அக்காலத்தில் அளக்கப்பட்டுள்ளது. அதனை அளந்த அதிகாரிகள் நாடுவகை செய்வோர் என்று வழங்கப் பெற்றனர் என்பது முன்னரே