உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் 2.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பலவகையாலும் ஆய்ந்து, உண்மைச் சரிதங் களை மக்கள் எல்லோரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் வேந்தர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாறுகள் நமக்கு மகிழ்ச்சியும் உணர்ச்சியும் அளிக்க வல்லன என்பது யாவரும் அறிந்ததொன்றாகும். கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் தமிழ் நூல் களையும் பிற ஆராய்ச்சி நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுதப்பெற்றது 'பாண்டியர் வரலாறு' என்னும் இந்நூலாகும். இது கடைச்சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி.பி.பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டிநாட்டில் ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் சரிதங் களைச் சுருக்கமாகக் கூறுவதாகும்.

இந்நூல் மூன்றாம் பதிப்பாக இப்பொழுது வெளியிடப் பெறுகின்றது. எனது ஆராய்ச்சியிற் புதியனவாகக் கண்ட கருத்துக்கள் பலவும் முன்னரே இடம்பெற்றுள்ளன. இதன் பிற்சேர்க்கையாக வேள்விக்குடிச் செப்பேடுகள் சின்னமனூர்ச் செப்பேடுகள் என்பவற்றின் பகுதிகளும் மெய்க்கீர்த்திகளும் பாண்டியரைப் பற்றிக் கல்வெட்டிற்கண்ட பாடல்களும் சேர்க்கப் பெற்றுள்ளன. ஆராய்ச்சித்துறையிற் கருத்து வேறு பாடுகள் நிகழ்தலும் புதியனவாகக் கிடைக்கும் ஆதாரங் களால் சில செய்திகள் திருத்தமெய்துதலும் இயல்பாகும். இந்நூல் எழுதுவதற்குக் கருவிகளாகவுள்ள தமிழ் நூல்களையுங் கல்வெட்டுக்களையும் பிறநூல்களையும் முறையே வெளியிட்டுதவிய புலவர் பெருமக்களுக்கும் கல்வெட்டு இலாகா அறிஞர்களுக்கும் ஆராய்ச்சியாளர்க்கும் எனது நன்றி யுரியதாகும்.